கல்வி உரிமை சட்டத்தை (ஆர்.டி.இ.,) மார்ச் 31ம் தேதிக்குள் அனைத்து
மாநிலங்களிலும் நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசு பிறப்பித்திருந்த
உத்தரவு இன்னும் பெரும்பாலான மாநிலங்களில் அமல்படுத்தப்பட படாமல் உள்ளது.
கல்வி பெறும் உரிமை சட்டம் அமல்படுத்தப்படாததால் பள்ளிகளில் மீண்டும்
குழந்தைகள் சேர்க்கை அளவு குறையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
அரசின் புள்ளி விபர
அறிக்கையின்படி 40 சதவீதம் துவக்கப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள்
இல்லாமலும், 33 சதவீதம் பள்ளிகள் பெண் குழந்தைகளுக்கு கழிப்பறை வசதி
இல்லாமலும், 39 சதவீதம் பள்ளிகள் மாற்றுதிறனாளி குழந்தைகளை பராமரிக்கும்
திறன் இல்லாமலும் உள்ளன.
மத்திய அரசு உத்தரவு: கடந்த 2009ம் ஆண்டு கொண்டு
வரப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி அளிக்கும்
உரிமை சட்டத்தை அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்த
மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. 2013ம் ஆண்டு மார்ச் 31ம்
தேதிக்குள் இந்த சட்டம் நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என காலக்கெடு
விதிக்கப்பட்டிருந்தது.
காலக்கெடு முடிவடைய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் பெரும்பாலான
மாநிலங்களில் இன்னும் அச்சட்டத்தை நிறைவேற்றாமல் உள்ளன. கல்வி உரிமை சட்ட
விதிகளின்படி போதிய மாணவர்கள்-ஆசிரியர்கள் விகிதம் இருக்க வேண்டும், போதிய
குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் அறிவுறுத்தப்பட்டுள்ள வேலை நாட்கள்
மற்றும் வேலை நேரம் மற்றும் பள்ளி நிர்வாகக் குழு ஆகியன அமைக்கப்பட
வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆசிரியர்கள் குறைபாடு: மத்திய அரசு 52 லட்சம் ஆசிரியர்
பணியிடங்களை ஒதுக்கி இருந்தும் இன்னும் 11 லட்சம் பணியிடங்கள் காலியாக
உள்ளன. இதனால் திறமையற்ற, முறையான பயிற்சி இல்லாத 8.6 லட்சம் ஆசிரியர்கள்
பணியமர்த்தப்பட்டுள்ளனர். இது போன்ற ஆசிரியர்கள் மேற்குவங்கத்தில் 1.97
லட்சம் பேரும், பீகாரில் 1.86 லட்சம் பேரும், ஜார்கண்ட்டில் 77,000 பேரும்
உள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே போன்று 94 சதவீதம் பள்ளிகள் குடிநீர் வசதி இல்லாமலும், 64 சதவீதம்
பள்ளிகளில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான தனித்தனி கழிப்பறை இல்லாமலும்
உள்ளன.
மாநிலங்கள் கோரிக்கை: போதிய வளங்கள் இல்லாததாலும்,
அரசியல் தலையீடுகளாலும் கல்வி உரிமை சட்டத்தை நிர்ணயிக்கப்பட்ட
காலக்கெடுவிற்குள் நிறைவேற்ற முடியாததால் காலக்கெடுவை மேலும்
நீட்டிக்குமாறு மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால் தரமற்ற கல்வி
இல்லாததால் திறமையற்றவர்கள் வேறுவழியின்றி ஒவ்வொரு ஆண்டும் பணி
அமர்த்தப்பட்டு வருவதாகவும் கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
2012ம் ஆண்டு நடத்தப்பட்ட ஏஎஸ்இஆர் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளின்படி,
அதிக அளவிலான குழந்தைகள் பள்ளிக்கு சென்றாலும் அவர்களின் கல்வி கற்கும்
திறன் குறைந்து வருவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 3
லட்சத்திற்கும் அதிகமான தனியார் பள்ளிகள் பெரும்பாலும் இந்த இலக்கை எட்டி
விட்டதாகவும், மத்திய அரசின் சட்டத்தின் படி கட்டுமான தேவைகளை நிறைவேற்றி
இருப்பதாகவும், 4 முதல் 5 கோடி மாணவர்களை உருவாக்கி இருப்பதாகவும் இந்த
ஆய்வில் தெரிய வந்துள்ளது.
No comments:
Post a Comment