பள்ளி வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தாமல்,
குளித்தலை பகுதியில் அசுர வேகத்தில் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம்
உள்ளது.
குளித்தலை பகுதியில், 10க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள்
மற்றும் மூன்று கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, 2,000க்கும்
மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு
வந்து செல்ல, அந்தந்த நிறுவனங்கள் பேரூந்து, வேன்களை இயக்குகின்றன.
கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, குளித்தலை-மணப்பாறை மெயின் ரோட்டின்
வழியாக தினமும் நுற்றுக்கணக்கான பள்ளி வாகனங்கள் சென்று வருகின்றன.
பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் கஷ்டமின்றி செல்ல
பள்ளி வாகனங்களில் மற்றும் தனியார் வாகனங்களில், பள்ளிக்கு அனுப்பி
வைக்கின்றனர். ஆனால், பொறுப்புடன் செல்ல வேண்டிய பள்ளிகளின் பேருந்து, வேன்
உள்ளிட்ட வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதாக, பொதுமக்கள் புகார்
கூறுகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: இப்பகுதி வழியாக
செல்லும் வாகனங்கள் டிரைவர்கள், மாணவர்களை குஷிப்படுத்தவும், நேரத்தை
சேமிக்கவும் அசுர வேகத்தில் வாகனத்தை ஓட்டிச் செல்கின்றனர். இதிலும் மக்கள்
நடமாட்டம் அதிகமுள்ள சாலைகளில் கூட, அதிவேகத்தில் வாகனங்களை
ஓட்டுகின்றனர். இந்த வாகனங்களை பார்த்தால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு
ஓட்டம் பிடிக்கின்றனர். கடந்தாண்டு சென்னையில் பள்ளி வாகன விபத்தில் மாணவி
ஒருவர் பலியானதைத் தொடர்ந்து, பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு பல்வேறு
கட்டுப்பாடுகளை, அரசு விதித்துள்ளது.
குறிப்பாக, வேக கட்டுப்பாட்டு கருவி, கண்டிப்பாக பொருத்த
வேண்டும். ஆபத்து கால வழி போன்ற விதிமுறைகள் கடைப்பிடித்திருத்தால் மட்டுமே
பள்ளி வாகனங்கள் இயக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டள்ளது. இந்த உத்தரவுகள்
பிறப்பிக்கப்பட்ட, சிறிது காலம் மட்டும் போக்குவரத்து போலீஸார் மற்றும்
ஆர்.டி.ஓ. ஆகியோர் கண்துடைப்புக்காக, "மாஸ்" ரெய்டுகளை மேற்கொண்டனர்.
தற்போது இந்த விதிமுறைகள் குறித்து கவலைப்படாமல் பள்ளி வாகனங்கள் இயங்கி
வருகின்றது. என்று அவர்கள் தெரிவித்தனர்.
விபத்துகள் ஏற்பட்டால் மட்டுமே, போக்குவரத்து காவல்
துறையினர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் பள்ளி வாகனங்களை சோதனை
செய்வதை வாடிக்கையாக கொண்டு இருக்காமல், மாணவ, மாணவிகள் மற்றும் அனைவரின்
நலன் கருதி, தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment