"விருத்தாசலத்தில், 10ம் வகுப்பு விடைத்தாள்கள் சேதம் அடைந்த
விவகாரத்தில், மறுதேர்வு நடத்தப்பட மாட்டாது. தமிழ் முதற்தாளில், மாணவர்கள்
எவ்வளவு மதிப்பெண்கள் பெறுகிறார்களோ, அதே மதிப்பெண்கள், இரண்டாம்
தாளுக்கும் வழங்கப்படும்,'' என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி
தெரிவித்துள்ளார்.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, கடந்த 29ம்
தேதி, தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடந்தது. கடலூர் மாவட்டத்தில்
தேர்வெழுதிய மாணவ, மாணவியரின் விடைத்தாள்கள், பி.முட்லூர் தபால் நிலையம்
மூலமாக, திருச்சி மாவட்டத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. பார்சல்
செய்யப்பட்ட விடைத்தாள் கட்டுகள், விருத்தாசலத்தில் ரயிலில் ஏற்றப்பட்டது.
ரயில் புறப்பட்ட சிறிதுநேரத்தில், ஒரு விடைத்தாள் கட்டு, கீழே
விழுந்ததில், பல விடைத்தாள்கள் சேதம் அடைந்தன. இந்த விவகாரம், ரயில்
திருச்சி சென்றபின், தெரிய வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, தேர்வுத்துறை,
தீவிர விசாரணை நடத்தி வருகிறது. சேதம் அடைந்த விடைத்தாள்களை, ரயில்வே
ஊழியர்கள், தீ வைத்து எரித்த சம்பவம், கல்வித்துறையை அதிர்ச்சி அடைய
வைத்துள்ளது.
இயக்குனர் அறிவிப்பு: இந்த பிரச்சனையில்,
தேர்வுத்துறையின் முடிவு குறித்து, இயக்குனர் வசுந்தராதேவி கூறியதாவது:
சம்பந்தப்பட்ட பார்சலில் இருந்த விடைத்தாள்கள், சென்னைக்கு கொண்டு
வரப்பட்டன. அதில், எத்தனை விடைத்தாள்கள் சேதம் அடைந்தன என்பது குறித்து,
ஆய்வு செய்து வருகிறோம். சேதம் அடைந்த விடைத்தாள்கள் சம்பந்தப்பட்ட
மாணவர்களுக்கு, மறுதேர்வு நடத்தப்பட மாட்டாது. சம்பந்தப்பட்ட மாணவர்கள்,
தமிழ் முதற்தாளில் எவ்வளவு மதிப்பெண்கள் எடுக்கிறார்களோ, அதே மதிப்பெண்,
இரண்டாம் தாளுக்கு வழங்கப்படும். முதல் தாளில், 100க்கு, 90 மதிப்பெண்கள்
பெற்றிருந்தால், இதே மதிப்பெண், இரண்டாம் தாளுக்கும் வழங்கப்படும்.
சம்பந்தப்பட்ட மாணவர்கள், முதல் தாளில், தோல்வி அடைந்திருந்தால், இரண்டாம்
தாளில், தேர்ச்சிக்குரிய மதிப்பெண்கள் வழங்கப்படும். இதற்கு முன் நடந்த
சம்பவங்களின் அடிப்படையிலேயே, இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள்
யாருக்கும் பாதிப்பு வராது. இவ்வாறு இயக்குனர் கூறினார்.
சேதம்
அடைந்த விடைத்தாள் பார்சலில், 357 விடைத்தாள்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
இதில், 200 விடைத்தாள்கள் மட்டுமே, சேதம் இல்லாமல் தப்பி உள்ளன. மீதமுள்ள
157 விடைத்தாள்கள் கடுமையாக சேதம் அடைந்தும், அதில், பல விடைத்தாள்
துண்டுகளை, ரயில்வே ஊழியர்கள் தீயிட்டு கொளுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டு
உள்ளது. எனவே, 157 மாணவர்களும், தமிழ் முதற்தாளில் எவ்வளவு மதிப்பெண்கள்
பெறுகிறார்களோ, அதே மதிப்பெண், தமிழ் இரண்டாம் தாளுக்கு வழங்கப்படும்.
விசாரணை:
விடைத்தாள்கள் சிதறிக் கிடந்தது தொடர்பாக, அனைவருக்கும் கல்வி இயக்க இணை
இயக்குனர் சசிகலா நேற்று விசாரணை நடத்தினார். மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர் ஜோசப் அந்தோணிராஜ், ஆர்.டி.ஓ., ஆனந்தகுமார் மற்றும் அதிகாரிகள்
விருத்தாசலம் ஆர்.எம்.எஸ்., அலுவலகத்தில் விசாரித்தனர். சேதமான
விடைத்தாள்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டது. அனைவருக்கும் கல்வி இயக்க
(எஸ்.எஸ்.ஏ.,) இணை இயக்குனர் சசிகலா, விடைத்தாள்கள் சேதமடைந்தது தொடர்பாக,
விருத்தாசலம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் நேற்று விசாரணை செய்தார்.
இதற்கு முன் நடந்த சம்பவம்:
கடந்த, 2008ம் ஆண்டு, ஏப்ரல் 24ம் தேதி இரவு, வேலூர் ஊரிசு மேல்நிலைப்
பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த, விடைத்தாள் திருத்தும் மையத்தில், திடீரென
தீ பிடித்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த, 10ம் வகுப்பு தமிழ், ஆங்கிலம்,
கணிதம் உள்ளிட்ட, பல்வேறு பாடங்களின், 50 ஆயிரத்து 20 விடைத்தாள்கள்,
தீயில் எரிந்து சாம்பலாயின. தேர்வுத்துறை அதிகாரிகள், நேரில் சென்று
விசாரணை நடத்தி, அரசுக்கு அறிக்கை அளித்தனர். எரிந்த விடைத்தாள்கள்
அனைத்தும், விழுப்புரம் மாவட்ட மாணவர்களுடையது என்பது, விசாரணையில்
தெரிந்தது. இந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, மீண்டும்
தேர்வு நடத்தப்படவில்லை. மாறாக, அவர்கள், அரையாண்டு தேர்வில் பெற்ற
மதிப்பெண்கள் அடிப்படையில், மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. ஒருதாள் கொண்ட
தேர்வு எனில், அரையாண்டு தேர்வை அடிப்படையாக கொண்டு, மதிப்பெண்
வழங்கப்படுகின்றன. இரு தாள் கொண்ட தேர்வுகள் எனில், ஒரு தாளில் பெற்ற
மதிப்பெண், பாதிக்கப்பட்ட மற்றொரு தேர்வுக்கு வழங்கப்படுகிறது. அதன்படி,
தமிழ் முதற்தாளில் பெறும் மதிப்பெண்கள், இரண்டாம் தாளுக்கு வழங்கப்பட
உள்ளது.
No comments:
Post a Comment