திண்டுக்கல்லில் பள்ளியை திடீரென மூடுவதாக நிர்வாகம்
அறிவித்துள்ளதால், 10 ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் படிப்பு
கேள்விக்குறியாகி உள்ளது.
திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டில் எம்.வி.எம்.,
மெட்ரிக்குலேஷன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. 6 முதல் பிளஸ் 2 வரை 420
மாணவர்கள் பயின்று வருகின்றனர். 9 ம் வகுப்பில் 26 மாணவர்களும், பிளஸ் 1
வகுப்பில் 49 மாணவர்களும் படித்து வருகின்றனர். இவர்கள் அடுத்த ஆண்டு
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதவேண்டும்.
இந்நிலையில் பள்ளி நிர்வாகம், மாணவர்களின் பெற்றோரை நேற்று
முன்தினம் அழைத்து, "வரும் கல்வியாண்டில் பள்ளியை மூடி விடுவோம்.
எங்களுக்கு அளித்த அரசு பதிவு முடிந்துவிட்டது. நீங்கள் மாணவர்களை வேறு
பள்ளிகளில் சேர்த்துக்கொள்ளுங்கள்" என, தெரிவித்துள்ளனர்.
பத்தாம்வகுப்பு, பிளஸ் 2 க்கு புதிதாக எந்த பள்ளியிலும்
சேர்க்கை நடக்காது. இப்படி இக்கட்டான நேரத்தில் மாணவர்களை தவிக்கவிட்டால்
நாங்கள் என்னசெய்வது என, பெற்றோர்கள் புலம்புகின்றனர். திண்டுக்கல் மாவட்ட
ஆட்சியர் வெங்கடாசலத்திடம் இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் முறையிட்டனர்.
இதற்கு ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர் மூலம் விசாரித்து நடவடிக்கை
எடுப்பதாக உறுதி அளித்தார்.
பள்ளி முதல்வர் கணேசமூர்த்தி கூறியதாவது: அடிப்படை வசதிகள்
இல்லாததால், பள்ளியை மூடுவது உறுதியாகிவிட்டது. பெற்றோர்கள் ஆட்சியரிடம்
புகார் அளித்துள்ளனர். இதனால் பிளஸ் 2, 10 ம் வகுப்பு மாணவர்களை அருகில்
உள்ள எம்.வி.எம்., பெண்கள் பள்ளியில் சேர்ப்பது அல்லது தனியாக வகுப்புகள்
நடத்துவது குறித்து, பெற்றோர்களுடன், பள்ளி நிர்வாகிகள் நாளை கலந்துரையாடல்
நடத்தி முடிவு செய்யவுள்ளனர். பெற்றோர்கள் கவலைப்பட வேண்டாம். 10 ம்
வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களை முறையாக தேர்வு எழுத வைப்போம், என்றார்.
No comments:
Post a Comment