தமிழகத்தில் ஜூனியர் இடைநிலை ஆசிரியர்களுக்கு சொந்த மாவட்டத்தில் பணியாற்ற
வாய்ப்பும், சீனியர் ஆசிரியர்கள் தொலைதூர மாவட்டங்களிலும்
நியமிக்கப்பட்டதால் ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 2008ம் ஆண்டு வரை, மாவட்ட வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். பின்னர், சென்னை உயர்நீதிமன்றம், ஒரு வழக்கில் இடைநிலை ஆசிரியர்களை மாநில பதிவுமூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும் என தீர்ப்பு அளித்தது. 2008ல் இவ்வாறு தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக, கடந்த 2009ம் ஆண்டுக்குப் பின்னர் தமிழகத்தில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறுதல் மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் பல இடங்களில் கணவன்-மனைவியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள், குழந்தைகளை பிரிந்து தனித்தனியாக பணியாற்ற வேண்டிய சூழல் நிலவுகிறது. இது, அவர்களிடையே கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கிப்ஸன் கூறியது:
தமிழகத்தில் கடந்த 2009ம் ஆண்டு 5000 இடைநிலை ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டனர். 2010ம் ஆண்டில் 2000 பேரும், 2012ம் ஆண்டில் 9800 இடைநிலை ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு டெட் தேர்வு மூலம் நியமிக்கப்பட்டவர்களில் 5 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சொந்த மாவட்டத்திலேயே பணி நியமன ஆணை வழங்கப்பட்டு உள்ளது.
ஆனால், 2009 முதல் நியமிக்கப்பட்ட மற்ற ஆசிரியர்களுக்கு இதுவரை மாவட்ட மாறுதல் வழங்கப்படவில்லை. அதாவது, சீனியர் ஆசிரியர்கள் வெளி மாவட்டத்திலும், ஜூனியர் ஆசிரியர்கள் சொந்த மாவட்டத்திலும் நியமிக்கப்பட்டு உள்ளனர். கணவன்-மனைவி இருவருமே ஆசிரியராக உள்ளநிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பை காரணம்காட்டி, மாவட்ட மாறுதல் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் குழந்தைகள், வயதான பெற்றோர்களை விட்டு தொலைதூர மாவட்டங்களில் தனித்தனியாக பணியாற்றும் சூழல் நிலவுகிறது.
முன்னாள் படைவீரர்கள், மாற்றுத்திறன் ஆசிரியர்களுக்கும் இந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது. குடும்பத்தை பிரிந்து தொலைதூர மாவட்டங்களில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்களுக்கு உள்ளதுபோல் 2009க்குப் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும். இவ்வாறு பொதுச்
செயலாளர் கிப்ஸன் கூறினார்.
No comments:
Post a Comment