"பிளஸ் 2 முடித்து சி.ஏ., (பட்டய கணக்காயர்) படிப்பை தேர்வு செய்தால்,
அதிக சம்பளத்துடன் வளமான எதிர்காலம் அமையும்" என, ஆடிட்டர் சரவணபிரசாத்
தெரிவித்தார்.
பிளஸ் 2வுக்குப் பின், உயர் கல்வி வாய்ப்புகள் குறித்து, தினமலர்
நாளிதழ், சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன
பல்கலை சார்பில் மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் நடந்த 2 ம் நாள்
"வழிகாட்டி" கருத்தரங்கில், அவர் பேசியதாவது:
பிளஸ் 2க்கு பின் தேர்வு செய்யும் கல்விதான், வாழ்க்கைக்கு பயனுள்ளதாக
அமையும். தற்போது சி.ஏ., மற்றும் ஐ.சி.டபிள்யூ.ஏ., போன்ற படிப்புகள்
மருத்துவம், பொறியியல் துறைக்கு இணையானது.
வரும் 2015 ல், ஏழு லட்சம் பட்டய கணக்காயர்கள் தேவைப்படுவர். சி.ஏ.
படிப்பு கஷ்டமானது என்ற கருத்து உள்ளது. நாள் ஒன்றுக்கு, 5 மணிநேரம்
படித்தால், சி.ஏ.,வில் தேர்ச்சி பெறலாம்.
ஒவ்வொரு ஆண்டும், ஜூனில் நுழைவு தேர்வு நடக்கும். சி.ஏ., இன்ஸ்டிடியூஷனில் மாணவர்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும்.
முதல் தேர்வில், அக்கவுண்டிங் 60, சட்டம் 40, பொருளியல் 50, கணிதம்
மற்றும் புள்ளியியலில் இருந்து 50 மதிப்பெண்கள் என, 200 மதிப்பெண்களுக்கு
கேள்விகள் கேட்கப்படும். குறைந்தது, நூறு மதிப்பெண் பெற வேண்டும். ஒவ்வொரு,
4 தவறான பதிலுக்கும், ஒரு மதிப்பெண் குறைக்கப்படும்.
ஒவ்வொரு பாடத்திலும், 30 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும். அடுத்து, 2 ம்
நிலை தேர்வு; இதில், 7 தேர்வுகள் எழுத வேண்டும். இதில் விரிவாக எழுதுதல்
மற்றும் செய்முறை கேள்விகள் இடம் பெறும். இதிலும் 50 சதவீதம் மதிப்பெண் பெற
வேண்டும். இறுதியாக மெயின் தேர்வு. இதை படிக்க மொத்தத்தில் ரூ.2 லட்சம்
செலவாகும்.
இரண்டாம் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றால், 5,000 ரூபாய் வரை ஊக்கத்தொகை
கிடைக்கும். சி.ஏ., முடித்தால், ஆரம்ப சம்பளமாக, ஒரு லட்சம் வரை பெறலாம்.
பிளஸ் 2 தேர்விற்கு படித்தது போல் படித்தாலே, சி.ஏ., எளிதில் தேர்ச்சி
பெறலாம்.
ஊடகத் துறை படிப்புகள்: மதுரை அருப்புக்கோட்டை ரோடு, சுப்பலட்சுமி
அறிவியல் கல்லூரி இணை பேராசிரியர் சி.மணிகண்டன்: ஊடகம் என்பது பத்திரிகை,
"டிவி", ரேடியோ மற்றும் மல்டி மீடியா போன்றவற்றை குறிக்கும். இத்துறையை,
கற்பனை மற்றும் கலை ஆற்றல் மிகுந்த மாணவர்கள் தேர்வு செய்தால், சாதனைகளை
படைக்கலாம்.
இத்துறை மட்டுமே ஆண்டுக்கு, 22 சதவீதம் வளர்ச்சியை எட்டுகிறது. நாட்டில்
15 ஆயிரம் அச்சு நிறுவனங்கள், 750 வானொலி நிலையங்கள், 700 "டிவி"
நிலையங்கள், 5,000 நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனங்கள், ஆயிரத்திற்கும்
மேற்பட்ட விளம்பரம் மற்றும் மல்டி மீடியா நிறுவனங்கள் உள்ளன. இவற்றில்,
வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.
தொழில் சார்ந்த மற்றும் தொழில் சாராத வல்லுநர்களும், இத்துறைக்கு அதிகம்
தேவை."டிவி&' க்கு நிகழ்ச்சிகளை வழங்குவதற்கு மட்டும், 20 ஆயிரம்
தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இதில், 3.50 லட்சம் தொழில்நுட்ப வல்லுநர்கள்
தேவையாக உள்ளனர். பெண்களும் இத்துறையில் சாதிக்கலாம்.
"டிவி" நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக, 75 சதவீதம் பெண்களே உள்ளனர்.
அவர்களும் வீடியோ எடிட்டிங் உள்ளிட்ட துறைகளில் சாதிக்கின்றனர். இதற்கு,
அடிப்படை கம்ப்யூட்டர் அறிவு இருந்தால் போதும். விஷூவல் கம்யூனிகேஷன் துறை,
பிரபலமாகி வருகிறது.
பி.எஸ்சி., பிலிம் மற்றும் டெலிவிஷன் புரடெக்ஷன் படிப்பு
முடித்தவர்களுக்கு, வெளி நாடுகளில் நல்ல சம்பளத்தில், வேலைகள்
காத்திருக்கின்றன. மதுரையில், சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல்
கல்லூரியில் இப்படிப்பு உள்ளது.
மேலும், சென்னை, கோல்கட்டா, புனே, ஒடிசா போன்ற இடங்களில் தரமான கல்வி
நிறுவனங்கள் உள்ளன. ஸ்டுடியோ வசதி, கல்லூரி, பல்கலை தேசிய தரச்சான்று
அங்கீகாரம் பெற்றவையா, உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளனவா? எனப் பார்த்து,
இப்படிப்புகளை மாணவர்கள் தேர்வு செய்யலாம்.
ஹெல்த் சயின்ஸ்: சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி
நிறுவன பல்கலை பேராசிரியர் வாசுதேவன் பேசியதாவது: தற்போது "ஹெல்த் சயின்ஸ்"
தொடர்பான படிப்புகள், மாணவர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன.
வரும் 2050 ம் ஆண்டுக்குள், இந்தியாவில் 50 சதவீதம் இளைஞர்கள், உடல்
பருமன் நோயால் பாதிப்பர் என, ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. உடல் பராமரிப்பு
குறித்து, 40 வயதிற்கு மேல்தான் கவலைப்படுகின்றனர். சம்பாதிப்பது எவ்வளவு
முக்கியமோ, உடலை பராமரிப்பதும் முக்கியம். உடல், மனதளவிலான ஆரோக்கியமே
சிறந்தது.
ஹெல்த் சயின்ஸ் படிக்க விரும்பும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., பயோ
டெக்னாலஜி, பல் மருத்துவம், பிசியோதெரபிஸ்ட், உடற்கல்வி போன்ற படிப்புகளை
தேர்வு செய்யலாம். அதிக சம்பளத்துடன் எதிர்காலம் காத்திருக்கிறது.
No comments:
Post a Comment