நெடுமானூரில் இடம் வழங்க மறுப்பதால் உயர்நிலைப் பள்ளியாக
தரம் உயர்த்தி, நிதி ஒதுக்கியும் இடம் இல்லாததால், புதிய கட்டடம் கட்ட
முடியாமல் இருக்கிறது, இதனால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை பகுதி கல்வியில்
பின் தங்கிய பகுதியாக உள்ளது. இப்பகுதி கிராமப் புறங்களை உள்ளடக்கியது.
வளர்ச்சி பெறாமலும், எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது.
இப்பகுதியிலுள்ள பல பள்ளிகள் 50 ஆண்டுகளை கடந்துள்ளன. ஆனால் அவற்றின் நிலை
அப்படியே தான் உள்ளது. எந்தவித முன்னேற்றமும் இல்லை. மாணவர்களின்
எண்ணிக்கையோ குறைந்து கொண்டே செல்கிறது.
உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தில் அரசு, உதவி பெறும் துவக்கப்
பள்ளிகள் என 81 பள்ளிகள் உள்ளன. நடுநிலைப் பள்ளிகள்-7, உயர்நிலைப்
பள்ளிகள்- 8, மேல்நிலைப் பள்ளிகள்-6 என மொத்தம்102 பள்ளிகள் உள்ளன.
திருநாவலூர் ஒன்றியத்தில் துவக்கப் பள்ளிகள்-78, நடுநிலைப் பள்ளிகள்-27,
உயர்நிலைப் பள்ளிகள்-5, மேல்நிலைப் பள்ளிகள்-3 என 113 பள்ளிகள் உள்ளன.
ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகள் மாணவர்களின் எண்ணிக்கையை
அதிகரிப்பதற்கு பதிலாக விரல் விட்டு எண்ணி பார்க்கக் கூடிய அளவில் உள்ளது.
ஆசிரியர்கள் எளிதாக பயணம் செய்ய முடியாத பகுதிகளில் பணிபுரிய மறுத்து வேறு
பகுதிகளுக்கு இடமாறுதலில் சென்றுவிடுகின்றனர். இதனால் உளுந்தூர்பேட்டை
பகுதிகளிலுள்ள பல பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் பல காலியாகவே இருந்து
வருகின்றன.
தமிழக அரசு கிராமப் புற முன்னேற்றத்திற்காகவும்,
மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்காகவும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை
எடுத்து வருகிறது. ஆனால் கிராம மக்கள், ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பு
இன்மையால் மாணவர்களின் கல்வி நிலை கேள்வி குறியாக உள்ளது.
தமிழக அரசு ஆண்டு தோறும் 100 பள்ளிகளின் தரத்தை உயர்த்தி
வருகிறது. கடந்தாண்டு அக்டோபர் 7ம் தேதி 710 நடுநிலைப் பள்ளிகள் தரம்
உயர்த்தப்பட்டன. அதில் நெடுமானூர் நடுநிலைப் பள்ளி மட்டுமே தரம்
உயர்த்தப்பட்டது. பல சிரமங்களுக்கிடையே கிடைத்த அரிய வாய்ப்பை நெடுமானூர்
கிராம மக்களால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இழந்து வருகிறது.
நெடுமானூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி கடந்த 1976ம்
ஆண்டு துவங்கப்பட்டு 2005ல் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
கடந்த 2011-12ம் கல்வியாண்டில் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு,
புதிய வகுப்பறை கட்டடத்திற்காக கடந்த 15.12.11ம் தேதி ரூ. 58 லட்சம்
ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது 1 முதல் 5ம் வகுப்பு வரை 126
மாணவர்களும், 5 ஆசிரியர்கள் உள்ளனர். 6-10ம் வகுப்பு வரை 272 மாணவர்களும் 8
ஆசிரியர்களில் 5 ஆசிரியர்களும், ஒரு தலைமை ஆசிரியரும் உள்ளனர்.
ஆனால் பள்ளிக்கு என போதிய இடம் இல்லை. இடம் ஒதுக்கீடு
செய்தால் உயர்நிலைப் பள்ளிக்கான வகுப்பறை கட்டடம் கட்ட முடியும். ஆனால்
இடம் வழங்க அப்பகுதி மக்கள் மறுக்கின்றனர். இதனால் நிதி ஒதுக்கீடு
செய்தும், தரம் உயர்த்தியும் பயனற்ற நிலையில் உள்ளது. உயர்நிலைப் பள்ளி
மாணவர்களை நடுநிலைப் பள்ளி மாணவர்களின் வகுப்பறை கட்டடத்திலேயே உட்கார
வைத்து கற்றுத் தருகின்றனர்.
இந்த நிலை மாற அப்பகுதி மக்கள் தான் இடம் ஒதுக்கீடு செய்ய
முன்வர வேண்டும். இல்லையேல் ஒதுக்கீடு செய்த நிதி வேறு பள்ளிக்கு சென்று
நெடுமானூர் பள்ளியின் நிலை கேள்வி குறியாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை.
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிக்கு இடம் வழங்க முன்வருமாறு
குமரகுரு எம்.எல்.ஏ., 4 முறை ஊராட்சி தலைவர், அப்பகுதி மக்களிடமும்
கேட்டுக் கொண்டார். ஆனால் யாரும் முன்வரவில்லை. மேலும், வேறு பள்ளிக்கு
நிதி சென்றுவிடும் எனவும் எச்சரித்தார்.
No comments:
Post a Comment