தமிழக அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச இட வசதியை ஏற்படுத்தாத தனியார்
பள்ளிகள் பிரச்னை குறித்து, ஆய்வு செய்ய, பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன்
தலைமையில், வல்லுநர் குழுவை அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இக்குழு, மூன்று மாதங்களில், தமிழக அரசுக்கு, அறிக்கையை வழங்கும் என,
தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தனியார் பள்ளிகளை துவங்கவும்,
ஏற்கனவே உள்ள பள்ளிகள், தொடர் அங்கீகாரம் பெறவும், குறைந்தபட்ச இடவசதியை
கொண்டிருக்க வேண்டும் என, தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் துணைவேந்தர் சிட்டிபாபு தலைமையிலான குழு அறிக்கையின்
அடிப்படையில், மாநகராட்சி பகுதியாக இருந்தால், ஆறு கிரவுண்டு இடமும்,
மாவட்ட தலைநகர பகுதியாக இருந்தால், எட்டு கிரவுண்டு இடமும், பள்ளிக்கு
இருக்க வேண்டும். நகராட்சி பகுதியாக இருந்தால், 10 கிரவுண்டு இடமும்,
பேரூராட்சி பகுதியாக இருந்தால், ஒரு ஏக்கர் பரப்பளவும், ஊராட்சியாக
இருந்தால், மூன்று ஏக்கர் பரப்பளவு இடமும் இருக்க வேண்டும் என, தமிழக அரசு
உத்தரவிட்டுள்ளது.
கூடுதலாக நிலம் வாங்க முடியாமல், 1,000த்திற்கும் மேற்பட்ட தனியார்
பள்ளிகள் தவித்து வருகின்றன. அதனால் முடிவு காண்பதில் இழுபறியானது.
இந்நிலையில், இந்த பிரச்னை குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை
அளிக்க, வல்லுநர் குழு அமைக்கப்படும் என, கடந்த ஆண்டு பட்ஜெட்டில்,
அறிவிப்பு வெளியானது.
ஒரு ஆண்டுக்குப் பின், இப்போது தான், வல்லுநர் குழுவை அமைத்து, தமிழக
அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 5ம் தேதியிட்ட அரசாணையில், பள்ளிக்கல்வி
இயக்குனர் தேவராஜன் தலைமையில், வல்லுநர் குழுவை அமைத்து, அரசு ஆணை
பிறப்பித்திருக்கிறது.
அரசாணை விவரம்: குறைந்தபட்ச இட வசதியை, ஒரே இடத்தில் ஏற்படுத்தாமல், 858
பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகத்தின் கீழ் இயங்கி வருகின்றன
என, அதன் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
கூடுதல் நிலம் வாங்குவதற்கு இயலாத நிலை இருப்பதாகவும், பள்ளி
நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. இதேபோன்ற நிலை, தொடக்கக் கல்வி மற்றும்
பள்ளிக்கல்வி துறையிலும் உள்ளன. இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டத்தின்படி,
அனைத்துப் பள்ளிகளும், அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். அங்கீகாரம்
இல்லாத பள்ளிகள் செயல்படக் கூடாது.
இதனால், மாணவர்களின் கல்வி நலனை கருத்தில்கொண்டு, இந்த விவகாரத்தில்,
நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை, இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
இப்பிரச்னை குறித்து ஆய்வு செய்து, குறைந்தபட்ச இட வசதியை நிர்ணயம் செய்வது
குறித்து முடிவெடுக்க, வல்லுநர் குழுவை அமைக்கலாம் எனவும், இயக்குனர்
தெரிவித்திருந்தார்.
அதன்படி, பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் தலைமையில், வல்லுநர் குழுவை
அமைத்து, அரசு உத்தரவிடுகிறது. இக்குழு, ஆய்வு செய்து, மூன்று
மாதங்களுக்குள், அரசுக்கு அறிக்கை வழங்க வேண்டும். இவ்வாறு அரசாணையில்
தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தனியார் பள்ளிகள் மாவட்ட சங்கங்களின் மாநில அமைப்பின்
பொதுச்செயலர் இளங்கோவன் கூறியதாவது: கட்டாய கல்வி சட்டத்தில், ஒரு
மாணவருக்கு, 10 சதுர அடி இடம் ஒதுக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.
நாங்கள், ஆறு அல்லது ஏழு சதுர அடி என்ற அளவில் நிர்ணயம் செய்து, இருக்கின்ற
இட வசதிக்கு ஏற்ப, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களை மட்டும் சேர்க்க
அனுமதித்தால் போதும் என, தொடர்ந்து கேட்டு வந்தோம்.
தற்போது, இந்த பிரச்னையை ஆய்வு செய்ய, வல்லுநர் குழுவை அமைத்து, அரசு
உத்தரவிட்டுள்ளது. எங்களது கோரிக்கையை, வல்லுநர் குழு, அரசுக்கு பரிந்துரை
செய்ய வேண்டும். இவ்வாறு இளங்கோவன் கூறினார்.
அரசின் நடவடிக்கையை, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கமும் வரவேற்றுள்ளது.
No comments:
Post a Comment