குரூப் 4ல் தேர்வான, 210 சர்வேயர்களுக்கு, குரூப் 2ல் அதிகாரமிக்க பதவி
கிடைத்ததால், நிலஅளவை பயிற்சியில் கலந்து கொள்ளாமல் ஓட்டம் பிடித்தனர்.
கடந்தாண்டு ஜூலையில், ஸ்டெனோகிராபர், இளநிலை உதவியாளர், தட்டச்சர்,
சர்வேயர், டிராப்ட்மேன் ஆகிய காலிப்பணியிடத்துக்கு, 10,718 பேருக்கான
தேர்வு நடந்தது.
அக்டோபரில் தேர்வு முடிவு வெளியிடப்பட்டு, நவம்பரில்
கலந்தாய்வு நடந்து, டிசம்பர் முதல் பணி நியமன உத்தரவு பெற்று பணியில்
சேர்ந்தனர். அதில், சர்வேயர் பணிக்கு தேர்வான, 432 பேருக்கு, கோவை, சேலம்,
ஒரத்தநாடு, திருச்சி, மதுரை, செங்கல்பட்டு ஆகிய இடங்களில், நிளஅளவை குறித்த
பயிற்சி அளிக்கப்பட்டது. கடந்த ஜனவரியில் துவங்கப்பட்டு, 60 நாள் பயிற்சி
வழங்கப்பட்டது. நிலஅளவை முறைகள், சொத்து வரி, நவீன கருவி மூலம் அளவிடும்
முறை, பட்டா, சிட்டா, "அ' பதிவேடு, புலப்பட நகல், பத்திரம், உயில், பவர்
பத்திரம், பத்திரப்பதிவு மற்றும் வருவாய் துறை ஆவணங்கள் பராமரிப்பு குறித்த
பயிற்சி வழங்கப்பட்டது.
பயிற்சியில் பங்கேற்றவர்களில், 50 சதவீதத்துக்கு
மேற்பட்டோர், கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த, நகராட்சி ஆணையர், உதவி பிரிவு
அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், முதுநிலை ஆய்வாளர், கண்காணிப்பாளர்
ஆகிய பதவிகளுக்காக, குரூப் 2 தேர்வெழுதினர். அவர்களில் பலருக்கு, குரூப்
2ல் தேர்ச்சியடைந்து அதிகாரியாகும் வாய்ப்பு கிடைத்தது. பணி நியமன உத்தரவு
வரும் வரை, பயிற்சியில் பங்கேற்கலாம் என, சிலர் மட்டுமே நிலஅளவை
பயிற்சியில் பங்கேற்றனர்.
புதிய பதவிக்கான உத்தரவாதம், குரூப் 2 மூலமாக
கிடைத்ததால், சிலர் பயிற்சியை பாதியில் விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர்.
அரசு, லட்சக்கணக்கில் செலவு செய்து பயிற்சி வழங்கும் நிலையில், 432 பேரில்,
210 சர்வேயர்கள் ஓட்டம் பிடித்தது, அதிகாரிகளை அதிர்ச்சியில்
ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து நிலஅளவை அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதியதாக
தேர்வு செய்யப்பட்ட சர்வேயர்களில், 210 பேர், குரூப் 2 தேர்வில்
தேர்ச்சியடைந்ததால், சர்வேயர் பணியை புறக்கணித்துவிட்டனர்.
கூடுதல் சம்பளம்
மற்றும் அதிகாரமுள்ள பதவி கிடைத்ததால் சென்றுவிட்டனர். அரசு,
காலிப்பணியிடங்களை நிரப்புவதே பெரிய விசயம், அவ்வாறு நியமிக்கப்பட்டதில்
பாதி பேர் ஓட்டம் பிடித்தது எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பயிற்சி
பெற்ற சர்வேயர்களுக்கு நேற்று முதல் அந்தந்த மாவட்டத்தில் செய்முறை பயிற்சி
வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment