படிக்கும் நேரத்தில், ஓய்விற்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் "டிவி" கதை
புத்தகம் வாசிப்பது போன்றவற்றால், படித்த பாடங்கள் நினைவில் நிற்காது
என்று உளவியல் நிபுணர் ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.
மாநிலம் முழுவதும், அரையாண்டு தேர்வுகள் துவங்கியுள்ள நிலையில்,
சமீபத்தில் பொதுத் தேர்வுகளுக்கான தேதிகள் பள்ளிக்கல்வித்துறையால்
வெளியிடப்பட்டது. அதன்படி, மார்ச் 3ம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கும்,
மார்ச் 26ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கும் தேர்வுகள் துவங்க
உள்ளது.
எனவே, பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களின் மனஅழுத்தத்தை
அதிகரிக்காத வகையில், வழிகாட்டுவது முக்கியமானது. உளவியல் நிபுணர்
ஸ்ரீனிவாசன் கூறியதாவது:
தேர்வுக்கு திட்டமிட்டு படித்தால், நல்ல மதிப்பெண்களை எளிதாக பெற
முடியும். தேவையற்ற பயமே, பாடங்கள் புரியாமல் போவதற்கு முக்கிய காரணமாக
அமைந்துவிடுகிறது. புதிதாக படிப்பதற்கு ஒன்றும் இல்லை, என்பதை மாணவர்கள்
புரிந்து கொள்ள வேண்டும்.
கடினமான கேள்விகளை ஒதுக்குவதை தவிர்த்து, மீண்டும் மீண்டும் எழுதி
படித்தால் கடினமான பாடங்களும் எளிதாகிவிடும். படிப்பதற்கு, நேரத்தை
ஒதுக்கும் மாணவர்கள் படித்ததை திருப்பி பார்ப்பற்கு நேரம் ஒதுக்குவதில்லை.
ஒரு மணி நேரம் படிப்பதற்கு ஒதுக்கினால், அடுத்த ஒரு மணி நேரம் படித்ததை
கண்களை மூடி நினைவு படுத்தி பார்க்கவேண்டும்.
மனித மூளையில் நிரந்தர நினைவு பகுதி, குறுகிய நேர நினைவு பகுதி என்று
பிரிவுகள் உள்ளது. படிக்கும் சமயத்தில் ஓய்வுக்காகவும், பொழுது
போக்கிற்காகவும் "டிவி&' பார்ப்பது, கதை புத்தகங்கள் படிப்பதை
தவிர்க்கவேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் படித்தவை நிரந்தர நினைவு
பகுதியில் நிற்காது. அட்டவணை போட்டு படிக்க பழக்கப்படுத்திக் கொள்ள
வேண்டும்.
அதிக தேர்வு பயத்தால், உடலில் "அக்ரினலின்" சுரக்கிறது இதனால், உடல்
சோர்வு, தூக்கமின்மை, கவனக்குறைவு போன்ற விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள்
உள்ளது. தேர்வு பயத்தை ஒதுக்கிவைத்து, தன்னம்பிக்கையுடன் தேர்வுகளை
எதிர்கொள்ள மாணவர்கள் தயாராக வேண்டும். இவ்வாறு, உளவியல் நிபுணர்
ஸ்ரீனிவாசன் கூறினார்.
No comments:
Post a Comment