அகில இந்திய அளவில் நடக்கும் மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வு
குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாணவர் பெற்றோர்
நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சங்க
தலைவர் பாலசுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை: "இந்தியாவில் அனைத்து
மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசு மருத்துவம் மற்றும் பல்
மருத்துவ கல்லூரிகளின், இளநிலை படிப்பில் உள்ள மொத்த இடங்களில் 15
விழுக்காடு இடங்கள் மத்திய அரசின் தொகுப்பு மூலம் நிரப்பப்படுகிறது.
மத்திய மேல்நிலைக் கல்வி வாரியம், அகில இந்திய இளநிலை
மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்திற்கான நுழைவு தேர்வை 2014ம் ஆண்டு மே
மாதம் 4ம் தேதி நடத்த உள்ளது. இத்தேர்வை எழுதுவதற்கு ஏற்கனவே பிளஸ் 2
முடித்தவர்கள் மட்டுமின்றி நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத
உள்ள மாணவர்களும் தகுதி பெற்றவர்கள் ஆவர்.
இந்த தேர்வை எழுத விரும்புவோர் வரும் 31ம் தேதிக்குள் www.aipmt.nic.in
என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கவும். பொதுப்பிரிவு மாணவர்கள் 1000
ரூபாயும், எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் 550 ரூபாயும் கட்டணமாக செலுத்த
வேண்டும். மேலும், வரும் 2014ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதிவரை அபராத தொகையுடன்
அதாவது பொதுப்பிரிவு மாணவர்கள் 2000 ரூபாயும், எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள்
550ம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
தனியார் பள்ளிகளில் இந்த நுழைவுத்தேர்வு குறித்து விவரங்கள்
எடுத்து கூறப்பட்டு, தேர்வுக்காண கட்டணத்தை பெற்று விண்ணப்பித்தும்
வருகிறது. ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு இதுபோன்ற நுழைவு தேர்வு
இருப்பதே தெரியவில்லை.
எனவே, இதுபோன்ற நுழைவுத்தேர்வுகள் குறித்து விழிப்புணர்வு
ஏற்படுத்த அரசு முன் வர வேண்டும். இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள்,
தரம் வாய்ந்த கல்லூரியில் மிக குறைந்த கட்டணத்தில் மருத்துவ படிப்பை
படித்து முடிக்க வாய்பாக அமையும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment