சிவில் சர்வீஸ் பணிக்கான முயற்சிகளைத் தொடங்கும் முன்னதாக, நமது
கலாச்சாரம், சமூகம் மற்றும் மொழியை மதித்து, நமது நாட்டைப் பற்றி நன்றாக
அறிந்துகொள்வது முக்கியம் என்று UPSC தலைவர் டி.பி.அகர்வால் கூறியுள்ளார்.
ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட
அவர் மேலும் கூறியதாவது: பல்கலைக்கழகங்களின் பகுதியாக இருக்க வேண்டிய
மாணவர்கள், கோச்சிங் மையங்களில் பயிற்சி பெறுவதற்காக பல்கலைகளை விட்டு
வெளியேறுகிறார்கள். ஆனால் கோச்சிங் மையங்களோ, வெறுமனே விஷயங்களை மனப்பாடம்
செய்யும் இயந்திரங்களாக மாணவர்களை மாற்றுகின்றன. எந்தவொரு விஷயத்தையுமே,
ஆழமாக படிப்பது அவசியம்.
அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளைச் சார்ந்த சுமார் 70% பட்டதாரிகள்,
சிவில் சர்வீஸ் தேர்வில் தங்களின் விருப்பப் பாடமாக humanities -ஐ தேர்வு
செய்கிறார்கள். இந்த வகையில், ஒருவர் மேம்போக்கான விஷயத்தை தாண்டி, ஆழமாக
செல்ல வேண்டியுள்ளது.
ஒருவர் உலகைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்பும் முன்னதாக, தனது கிராமம்,
மாவட்டம், மாநிலம் மற்றும் நாட்டைப் பற்றி நன்றாக தெரிந்துகொள்வது
முக்கியம். நாம் வாழும் சமூகத்தைப் பற்றிய தெளிவான அறிவு நமக்கு இருப்பது
அவசியம்.
நமது சொந்த மொழியை நாம் மதிப்பது முக்கியம். UPSC அமைப்பு பிராந்திய
மொழிகளுக்கு எதிரானது என்ற கருத்து தவறு. மொழியை தேர்வு செய்வதற்கான
அதிகபட்ச சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. புதிய மொழியை கற்றுக்கொள்ளும்
ஒருவர் சிறந்த நபராக விளங்க முடியும்.
சிவில் சர்வீஸ் மெயின் தேர்வுக்கு ஒருவர் எந்த மொழியை தேர்வு
செய்திருந்தாலும் பரவாயில்லை, நேர்முகத் தேர்வில் ஒருவர் தனக்கு விருப்பமான
மொழியை தேர்வு செய்து கொள்ளலாம். நேர்முகத் தேர்வில் மொழிப்
பெயர்ப்பாளர்கள் இருப்பார்கள். ஆனால் கேள்விக்கான தெளிவான பதிலை சொல்ல
வேண்டியது பங்கேற்பாளரின் கடமை. அதேசமயம், மொழி பெயர்ப்பாளர்கள் தவறு
செய்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
நேர்முகத் தேர்வை பொறுத்தவரை அங்கே கேட்கப்படும் கேள்விகள் மிகவும்
எளிதானது என்பதை மனதில் கொள்ள வேண்டும். ஒருவர் உண்மையாகவும்,
கண்ணியமாகவும், தனது இதயத்திலிருந்து பேச வேண்டும். நீங்கள் நீங்களாகவே
இருங்கள். உங்களின் உள்ளார்ந்த தகுதிகளே உங்களுக்கு உதவும்.
ஒரேயொரு செய்தித்தாளை மட்டுமே படிக்கக்கூடாது. பல்வேறான
செய்தித்தாள்களைப் படிக்க வேண்டும். பிராந்திய மொழி செய்தித் தாள்களும்
முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment