"ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகள் ரத்தால், அரசு பணியில் சேர டாக்டர்கள்
தயங்குகின்றனர்" என அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் செந்தில் கூறினார்.
அவர் கூறியதாவது: அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு, 8,
15, 17, 20 ஆகிய ஆண்டுகளில், தகுதி அடிப்படையில் பதவி உயர்வு அளிக்க
வேண்டும். இதற்கான உத்தரவை (அரசாணை எண்-245), அரசு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து, டாக்டர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
புதிதாக துவங்கிய, சில மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நர்ஸ், லேப் -
டெக்னீசியன் பணியிடங்கள் காலியாக இருப்பதால், பணி பாதிக்கிறது. விரைந்து
காலியிடங்களை நிரப்ப வேண்டும் என, அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
புது அரசாணைப்படி, டாக்டர்கள் பதவி உயர்வு கவுன்சிலிங் முடிந்த பின்,
2013 டிசம்பருக்குள், டாக்டர்கள் இடமாற்ற கவுன்சிலிங் நடத்தி, உதவிப்
பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். துறை வாரியாக, சிறப்பு
டாக்டர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது.
அரசு பணியில் சேர்வதில், டாக்டர்களின் ஆர்வம் குறைந்து வருகிறது. அதன்
அடையாளமாக, சமீபத்தில் வெளியான சிறப்பு டாக்டர் நியமன அறிவிப்பின் போது,
1,000 காலியிடத்திற்கு, 300 பேர் மட்டுமே விண்ணப்பித்தனர். மன அழுத்தம்,
பணிச்சுமை போன்றவற்றை கருதி பயந்து, பணிக்கு வர தயங்குகின்றனர்.
பற்றாக்குறையை தவிர்க்க, விரும்பி பணியில் சேர வரும் சிறப்பு
டாக்டர்களை, உடனே பணியில் சேர்த்துக் கொள்ளலாம் என, உத்தரவை பெற்றுள்ளோம்.
குறிப்பாக மயக்கவியல், மகப்பேறு பிரிவுகளில் பணிபுரிய டாக்டர்கள்
தயங்குகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment