கோவையில் வேலை தேடி வரும் வெளிமாவட்ட மக்களால், குழந்தை தொழிலாளர்களின்
எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை
பூஜ்ய நிலையை எட்ட முடியாமல் அதிகாரிகள் திண்டாடுகின்றனர்.
இளம் சிறார்கள், வறுமை, குடும்ப
சூழ்நிலை காரணமாக பள்ளி செல்வதை நிறுத்தி விட்டு, வேலைக்கு செல்வதால்,
அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக வாய்ப்புள்ளது. இதை ஒழிக்க, மத்திய,
மாநில அரசுகளின் சார்பில், தொழிலாளர் நலத்துறையின் கீழ், மாவட்டந்தோறும்
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டம் செயல்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில், அதிகளவு தொழிற்பேட்டைகள் இருப்பதால், வேலை தேடி வெளி
மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து
செல்கின்றனர். இங்கு தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ தங்கும் பொதுமக்கள்,
தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் அக்கறை காட்டுவதில்லை.
குடும்ப சூழ்நிலைக்காக பிழைப்பு தேடி வந்துள்ளதால், சிறார்களும் வறுமை
காரணமாக, பள்ளி செல்லாமல், தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ சில
இடங்களில் வேலை செய்கின்றனர். படிக்க வேண்டிய வயதில், வேலைக்கு செல்வதால்,
சிறார்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக வாய்ப்புள்ளது.
பஞ்சாலை, ஓட்டல், பொம்மை விற்பனை, மளிகைக்கடை, ஆட்டோ மொபைல் கடைகள்
போன்ற இடங்களிலேயே பெரும்பாலும் குழந்தைகள் வேலை செய்கின்றனர். பாதுகாப்பு,
வேலை நிரந்தரம் உள்ளிட்ட காரணங்களால், பெற்றோர்களாலே, "கான்ட்ராக்ட்"
முறையில் விடப்படுவதாக, கூறப்படுகிறது.
குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், சிறார்களை பள்ளிக்கு அனுப்பவும்,
பள்ளிக்கல்வித்துறை, குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகம், தொழிலாளர்
நலத்துறை மற்றும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு அலுவலகத்தின் சார்பில்,
அவ்வப்போது ஆய்வு செய்யப்படுகிறது. 14 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் வேலைக்கு
சென்றால், அவர்களை மீட்டு, பள்ளிக்கு அனுப்புகின்றனர்.
குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஹெல்ப் லைனுக்கு வரும் புகார்கள் மற்றும்
களப்பணியாளர்களின் ஆய்வு மூலம், குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்படுகின்றனர்.
இப்படி மீட்கப்படும் பெரும்பாலான சிறார்கள், வெளி மாநிலம் மற்றும்
மாவட்டத்தை சேர்ந்த குழந்தைகளாக உள்ளனர்.
கோவை மாவட்டத்தில், 2011ம் ஆண்டில் 56 சிறார்களும், 2012ல் 38
சிறார்களும் மீட்கப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் இதுவரை 46 பேர்
மீட்கப்பட்டுள்ளனர். இப்படி மீட்கப்படும் சிறார்களை, சிறப்பு கல்வி
மையங்களின் மூலம், கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
இவர்களுக்கு இலவச உணவு, மருத்துவம், போக்குவரத்து மற்றும் மாதத்துக்கு
150 ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இருப்பினும், வெளி மாவட்ட
சிறார்களை வேலை செய்யும் இடத்தில் இருந்து மீட்டு, பள்ளிக்கு அனுப்ப
நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், பெற்றோர்கள் ஒத்துழைப்பதில்லை என
கூறப்படுகிறது. இதுபோன்ற காரணங்களை ஆய்வு செய்து சிறார்களை மீட்கும் பணியை
தொடர்ந்து செய்தாலும், முற்றிலுமாக குழந்தை தொழிலாளர்களை குறைக்க
முடியவில்லை.
மாவட்ட குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்ட அலுவலர் விஜயக்குமார்
கூறுகையில், "குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்க, விழிப்புணர்வு
நிகழ்ச்சிகள் நடத்துகிறோம். வேலை செய்யும் இடங்களை ஆய்வு செய்தல் உள்ளிட்ட
பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதிலும் பூஜ்ய நிலையை அடைவது சிரமமாக உள்ளது.
வெளிமாவட்ட மக்களின் வருகையால், குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை
அதிகரித்து கொண்டே போகிறது. இருப்பினும், நடப்பாண்டில், 46 குழந்தைகளை
மீட்டுள்ளோம். இதில், 28 குழந்தைகளை, குழந்தைகள் நல குழுவிடமும், ஏழு பேரை
பெற்றோர்களிடமும், நான்கு பேரை சிறப்பு பள்ளியில் கல்வி கற்பிக்கவும்
அனுப்பியுள்ளோம். பெற்றோர் ஒத்துழைத்தால், மட்டுமே பூஜ்ய நிலை என்பது
சாத்தியமாகும்" என்றார்.
No comments:
Post a Comment