அரசியல்வாதிகள் எப்படி இருந்தால், ஓட்டளிப்போம் என்பதற்கு, இளைஞர்கள்
கொடுத்த புது உதாரணம் தான் டில்லி தேர்தல். கல்லூரி மாணவர்களின் புத்தாண்டு
கனவு என்ன? தேசம், கல்வி, அரசியல் பற்றி அவர்களின் புத்தாண்டு
எதிர்பார்ப்பு என்ன?
மாற்றுக் கல்வியை சிந்திக்க வேண்டும்
எஸ்.கார்த்திக், அமெரிக்கன் கல்லூரி, மதுரை: ஊழலற்ற,
மதச்சார்பற்ற, கல்வியை முன்னேற்றும் அரசு வந்தால் தான், இந்தியாவிற்கு
நல்லது. அறிவியல் சம்பந்தமான கல்வி இப்போது இல்லை. கல்விக்கு அதிகம்
செலவிடும் மத்திய அரசு அமையவேண்டும். மாற்றுக்கல்வி முறை குறித்து யோசிக்க
வேண்டும். டில்லியில் இளைஞர்கள் மாற்றத்தை விரும்பினர்; நடந்தது. இன்றைய
இளைஞர்களும், சமூகம் சார்ந்த சிந்தனையுடன் வளர வேண்டும்.
ஓட்டளிக்காமல் முடங்கக்கூடாது
ஏ.எஸ்.இலக்கியா, எஸ்.எஸ். எம்., பொறியியல் கல்லூரி,
திண்டுக்கல்: இளைஞர்கள் அரசியலுக்கு வந்து புதிய பாதையை உருவாக்கவேண்டும்.
அவர்களால் தான் நிர்வாகத்தை திறம்பட நடத்த முடியும். ஓட்டளிக்காமல்
இளைஞர்கள் முடங்குவதால், தகுதியில்லாதவர்கள் ஆட்சிக்கு வருகின்றனர். வயதான
அரசியல்வாதிகள், வழிநடத்துபவர்களாக மட்டுமே இருக்க வேண்டும். "மொபைல்" போன்
பேசுவது, "இன்டர்நெட்" "பேஸ்புக்" பார்ப்பதில் நேரத்தை வீணடிக்கக்கூடாது.
பிறருக்கு உதவும் மனப்பான்மையை, இந்த ஆண்டில் குறிக்கோளாக கொண்டு செயல்பட
உள்ளேன்.
நாட்டை முன்னேற்றும் கல்வி வளர்ச்சி
ஆர்.தாமோதரன், பி.எஸ்.என். ஏ., பொறியியல் கல்லூரி,
திண்டுக்கல்: இளைஞர்கள் அரசியலை வெறுப்பதால், தகுதியில்லாதவர்கள் ஆட்சிக்கு
வருகின்றனர். நமது ஓட்டுரிமையை பயன்படுத்தி, வரும் லோக்சபா தேர்தலில்
நல்லவர்களை தேர்வு செய்ய வேண்டும், என்பதில் உறுதியாக நிற்க வேண்டும்.
ஓட்டளிப்பதை கட்டாயமாக்கினால் தான், ஆட்சியாளர்களை தேர்வு செய்வதில்
இளைஞர்களிடம் பிடிப்பு ஏற்படும். கல்வி வளர்ச்சியால் தான் நாடு வல்லரசாக
முடியும். இந்த புத்தாண்டில் மது, புகைபிடித்தல் போன்ற போதை பழக்கங்களை
இளைஞர்கள் விட்டொழிக்க முன்வர வேண்டும்.
படைப்புகளுக்கு முன்னுரிமை
எஸ்.நிவேதா, பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரி, ஆண்டிபட்டி:
பொருளாதார முன்னேற்றம் காணும் ஆண்டாக, கல்வி வளர்ச்சிக்கான பல திட்டங்களை
செயல்படுத்தும் ஆண்டாக 2014 இருக்க வேண்டும். கல்வித்துறையில், நிறைய
மாற்றம் தேவை. மாணவர்களின் படைப்புத்திறன்களுக்கு முக்கியத்துவம் தரும்
கல்வித்தரம் வேண்டும். இந்திய பொருளாதாரத்தை வலுவூட்டுவதில்
ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. வேலைவாய்ப்புகள் தேடி வெளிநாடு செல்வதை
இளைஞர்கள் தவிர்க்க வேண்டுமெனில், திறமைகள் நமது நாட்டிற்கு பயன்படும்
வகையில் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
அரசியல் என்றால் முதியோரா?
என்.அம்மு பிரியதர்ஷினி, ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப்
மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ், மதுரை: பணத்திற்கும், சிபாரிசுக்கும் வேலை தராமல்,
திறமையின் அடிப்படையில் இளைஞர்களுக்கு வேலை தரும் அரசு அமைய வேண்டும்.
உணர்வுகளுக்கு மதிப்பளித்து நல்ல விஷயங்களுக்கு இளைஞர்கள் போராடும் போது,
அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. எனவே இளைஞர்களின் அரசியல்
பயத்தை அகற்றும் அரசு அமைய வேண்டும். இளைஞர்களை ஊக்குவிக்கும், ஆதரிக்கும்
கட்சிக்கே, ஆதரவளிக்க வேண்டும். அரசியல் என்றால் வயதானவர்கள் தான்,
பதவிக்கு வரவேண்டுமென்ற மாயை ஒழிய வேண்டும்.
ஊழல் புற்றுநோயை அகற்ற வேண்டும்
கே.பி.பாலபிரகாஷ், தேனி கம்மவார் சங்கம் பொறியியல் கல்லூரி,
தேனி: அரசியல்வாதிகளிடம் புற்றுநோய் போல் பரவி வரும், ஊழலை ஒழித்தால் தான்
நாடு முன்னேறும். இந்தாண்டு வரும் லோக்சபா தேர்தல் சரியான துவக்கம், என
நினைக்கிறேன். இதே சிந்தனையில் தான், என் போன்ற இளைஞர்கள் உள்ளனர். தேவையான
மனித சக்தி நம்மிடம் உள்ளது. அதை சரியான முறையில் வழிநடத்தி செல்லத்
தகுந்த நபர், பிரதமராக வரவேண்டும். தேசிய நதி நீர் இணைப்பில் கவனம் செலுத்த
வேண்டும். இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம், இதில் உள்ள நடைமுறை
சிக்கல்களை தீர்க்க வேண்டும். மரங்களை பாதுகாத்து, உலக வெப்பமயமாக்கலை
குறைக்க வேண்டும். இதையே அனைத்து இளைஞர்களும், புத்தாண்டு சபதமாக
எடுத்துக்கொள்ள வேண்டும்.
பெண் கொடுமை ஒழிய வேண்டும்
கே.ஷர்மிளா, பி.பி.ஏ., செய்யது அம்மாள் கல்லூரி,
ராமநாதபுரம்: முதன் முதலாக லோக்சபா தேர்தலுக்கு ஓட்டளிக்கப் போகிறேன்.
சமீபகாலமாக, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. கடும்
தண்டனை அளிக்கும் வகையில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான்
பெண்கள் தைரியமாக பல துறைகளிலும் சாதிக்க முடியும். அரசு அலுவலகங்களில்
லஞ்சத்தை ஒழிக்க நினைக்கும், மத்தியில் ஊழலற்ற ஆட்சியை அமைக்க விரும்பும்
கட்சிக்கு, எனது ஓட்டை பதிவு செய்வேன்.
யாருக்கும் சலுகை வேண்டாம்
ஏ.பி.ராமராகவன், பி.பி.ஏ., அரசு கலைக்கல்லூரி, பரமக்குடி:
ஜனநாயகத்தை காக்க, முதன்முதலாக வாக்களிக்கப் போகிறேன். டில்லியில் நடந்த
புரட்சி போன்று, இந்தியா முழுவதும் ஊழலற்ற ஆட்சி அமைக்கப்படும் என கூறும்
கட்சிக்கு, வாக்களிக்க விரும்புகிறேன். குறிப்பிட்டவர்களுக்கு மட்டும்
சலுகைகளை கொடுத்தால் போதும்; ஆட்சி அமைத்து விடலாம் என, ஆட்சியாளர்கள்,
அரசியல்வாதிகள் நினைக்கின்றனர். ஜனநாயகத்தில் அனைவரும் சமம் என்ற
குறிக்கோள் வேண்டும். காய்ந்து வரும் நதிகளை காக்க, நதி நீர் இணைப்பு மிக
முக்கியமாக செய்ய வேண்டும்.
பெண்களை பாதுகாப்பதில் அக்கறை
எஸ்.சியாமளா, ரோஸ்லின் கல்வியியல் கல்லூரி, சிவகங்கை: வரும்
லோக்சபா தேர்தல் முடிவு, வாரிசு அரசியலுக்கும், பரம்பரை
அரசியல்வாதிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் இருக்க வேண்டும்.
சிறந்த இளைஞர்களுக்கு வாய்ப்பு தரும் ஆட்சி வர வேண்டும். மக்களுக்கு நல்லது
செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டும் செயல்பட்டால், அவை நல்ல ஆட்சியாக
இருக்கும். மகளிருக்கு மறுமலர்ச்சி தரும் ஆண்டாக இருக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும்
டி.பாலமுருகன், ராஜா துரை: சிங்கம் அரசு கல்லூரி, சிவகங்கை:
கிராமப்புற மாணவர்கள் நவீன கல்வி முறையை பெற, பல்வேறு திட்டங்களை கொண்டு
வர வேண்டும். மாநிலந்தோறும் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில்,
தொழிற்சாலைகள் உருவாக வேண்டும். சரியான கல்வி, வேலை வாய்ப்பின்மையால் தான்
கலவரம் போன்ற பிரச்னை ஏற்படுகிறது. படித்தவர்கள் கூட, சட்டவிரோத செயல்களில்
ஈடுபட முற்படுகின்றனர். படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரும்போது,
நடைமுறைக்கு ஏற்ப நல்ல திட்டங்களை கொண்டு வரமுடியும். மக்களின் பிரச்னை
பற்றிய ஆரோக்கியமான சிந்தனையும் உருவாகும்.
சம உரிமை வழங்க வேண்டும்
டி. ஜெயந்தி, செந்திக்குமார நாடார் கல்லூரி, விருதுநகர்:
படித்த இளைஞர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும். புதிய அறிவியல் கண்டுபிடிப்பு,
ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் தர வேண்டும். ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை
கடுமையாக தண்டிக்க வேண்டும். மற்ற நாடுகளைப் போல் நம் நாட்டிலும்
பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும். பெண் கல்வி ஊக்குவிக்கப்பட்டால்,
சிறுமிகள் திருமணம் தானாக நின்றுவிடும். இதை வலியுறுத்தும் அரசியல்
கட்சிகளுக்கே, வரும் லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க வேண்டும். பணத்திற்காக
நமது ஓட்டுரிமையை கொடுக்க கூடாது. இதையே, வரும் புத்தாண்டில் சபதமாக
ஏற்போம்.
பணம் வாங்காமல் ஓட்டளிக்க வேண்டும்
எம். கிளிதுரை, ஸ்ரீவித்யா பொறியியல் கல்லூரி, விருதுநகர்:
லஞ்சம், ஊழல் பிரச்னையால், உலக நாடுகள் மத்தியில், நமக்கு அவப்பெயர்
ஏற்படுகிறது. இது, வளர்ச்சிக்கு நல்லதல்ல. பள்ளி பருவம் முதலே மாணவர்களிடம்
லஞ்சம், ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும். அவர்கள் மூலம்,
பெற்றோர், சமுதாயத்திற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தினால், ஊழலை
படிப்படியாக ஒழிக்கலாம். அரசியல்வாதிகளிடம் பணம் வாங்காமல் தேர்தலில்
ஓட்டளிப்பேன் என, அனைவரும், புத்தாண்டு சபதம் எடுத்து, நேர்மையான,
திறமையானவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இளைஞர்களின் கனவு தேசம்... நனவாகும் நாள் வெகுதொலைவில் இல்லை. உணர்ந்து கொள்ளுங்கள் அரசியல்வாதிகளே..!
No comments:
Post a Comment