பள்ளி, கல்லூரி முடித்து வந்த பின்னரும், விடுமுறை நாட்களிலும்
பொழுதுகளை கழிப்பது கடினமான செயலாக பதின் பருவத்தினரிடையே காணப்படுகிறது.
ஒரே செயல்பாட்டை நாள் முழுவதுக்குமானதாக தொடர இளம் தலைமுறையால்
முடிவதில்லை. புதியவற்றை அவர்கள் மனம் தேட ஆரம்பித்துவிடுகிறது. இதன்
காரணமாக பொழுதை போக்குவதில் கூட குழப்பங்கள் ஏற்படுகிறது.
இளம் பருவத்தினர்
பாடங்கள் படிப்பதை தவிர்த்து மீதமான நேரத்தை எப்படி செலவழிப்பது என்பதில்
தெளிவில்லாமலேயே இருக்கின்றனர். பொழுதை கழிப்பதற்காக முதலாவதாக இவர்கள்
தேர்ந்தெடுப்படுப்பது தொலைக்காட்சியை, அடுத்ததாக கணினி விளையாட்டுகள்,
திரைப்படம் என தங்களுக்கு விருப்பமானதாக தெரியும் இவற்றை
பயன்படுத்துகின்றனர். நண்பர்கள் இணைந்து திரைப்படம் பார்க்கிறார்கள்
என்றால் திரைப்படம் முடிந்தவுடன், நண்பர்களுக்கிடையே ஒவ்வொருவரிடமிருந்தும்
"அடுத்து என்ன செய்வது?, அங்கே போவதா?, இங்கே போவதா?" என்று கேள்விகள்
எதிர்படுகின்றன. எங்கு போக வேண்டும் என்று சொன்னாலும், அது முதலில்
தவிர்க்கப்பட்டு பின்னர் எதாவது இரு திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கே
திருப்தியில்லாமல் செல்லக்கூடிய நிலையே காணப்படுகிறது.
நேரத்தை எப்படி கழிப்பது என்று கூட தெரியாமல் அல்லது
புரியாத தலைமுறைகளாக இந்தத் தலைமுறை வளர்ந்துகொண்டிருக்கிறது. இந்தத்
தலைமுறைக்கு சரியான வழிகாட்டுதல்கள் இல்லாததோ அல்லது அதற்கான வாய்ப்புகள்
கிடைக்கும் வகையில் சூழ்நிலைகளை கட்டமைக்கப்படாதது கூட காரணமாக இருக்கலாம்.
நேரத்தை எப்படி கழிப்பது? என்பதை சென்னையை கடந்து வெளியூர்களில் இருக்கும்
நகரத்து குழந்தைகள் சமீப காலமாக உணர்ந்து வருகின்றனர். அதற்கு காரணம்
மின்சாரம் இல்லாத நேரங்கள்.
ஏனென்றால், நேரத்தை செலவழிப்பதற்கு மின்சாரத்தால் இயங்கும்
சாதனங்களைத் தான் பயன்படுத்துகிறார்கள். இந்த வகை சாதனங்கள் நேரத்தை
மட்டுமல்ல அறிவு வளர்ச்சிக்கும் பெரும் தடையை ஏற்படுத்தும் வகையில்
இருக்கிறது. மின் மற்றும் மின்னணு சாதனங்கள் மனிதர்களுக்கு இடையே
இடைவெளியையும், இயற்கைக்கும் மனிதனுக்குமான தொடர்பில் பாதிப்பையும்
ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தடுமாற்றங்களை சரி செய்ய வேண்டுமென்றால்
மீண்டும் தடைகளை கடந்து வெளியேற வேண்டியது இருக்கிறது.
பொழுதை கழிக்கக்கூடிய நேரங்கள் அனைத்தும் உபயோகமானதாக
இருக்கிறதா என்பதில் இளம் பருவத்தினர் கவனம் செலுத்துவதில்லை. ஒரு சில
பெற்றோரும் "தங்கள் பிள்ளை தொந்தரவு செய்யாமல் இருக்கிறதே அதுவே போதும்"
என்ற மனநிலையில் தான் இருக்கின்றனர். அவசியமில்லாததில் நேரத்தையும்,
மூளையையும் செலவிடும் இது போன்ற நிலையால், எதிர்கால சமூகத்தின்
வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும் எனபதனை பலரும் நினைத்துப் பார்ப்பதில்லை.
நேரங்களை உபயோகமான முறையில் மேம்படுத்த நண்பர்களோடு தங்கள்
முந்தைய காலத்தில் செய்த குறும்புகள், விளையாட்டுக்கள் ஆகியவற்றை
ஓவ்வொருவரும் பகிர்ந்துகொள்வதே மிகச்சிறந்த பொழுதுபோக்காகும். மனம்
தகவல்களை பரிமாறிக்கொள்ளும்போது உற்சாகத்தால் நிரம்பி வழிகின்றது. இரவு
நேரமாக இருந்தால் வானத்தின் நிலவொளியில் உற்சாகமாக பேசலாம். மரங்கள்
சூழ்ந்த பகுதியில் மோட்டார் வாகனங்களை தவிர்த்து கைவீசி பேசலாம்.
பறவைகளையும், கடல் அலையையும் ரசிக்கலாம். கடல் இல்லாவிட்டால் ஆற்றின்
நீரோட்டத்தையும், குளத்தின் அமைதியையும் கண்டு உணரலாம். இயற்கை கணக்கில்லாத
பாடங்களை நமக்கு கற்றுத்தர தயாராக இருக்கிறது. பாடங்கள் படிக்க தயாரா?
No comments:
Post a Comment