கடல்சார் படிப்புகளை முடித்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சி.டி.சி.,
சான்றிதழ் பெற மும்பைக்கு சென்று காத்திருக்க வேண்டி உள்ளது. பாஸ்போர்ட்
பெறுவது போல் தனியார் உதவியுடன் இதை எளிமையாக்கி வழங்க மத்திய அரசு
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கடல்சார் படிப்புகள்
எதுவாயினும், கப்பல்களில் பணியாற்ற வேண்டும் என்றால் சி.டி.சி.,
(Continuous Discharge Certificate) சான்றிதழ் பெறுவது அவசியம்.
வெளிநாட்டிற்கு செல்ல பாஸ்போர்ட் போல கப்பல் பணிக்கு சி.டி.சி., முக்கியம்.
கப்பல் பணியாளரின் அடையாள சான்றிதழாக மட்டுமல்ல, அவரது, "சர்வீஸ்
ரிக்கார்டு" ஆகவும் இது உள்ளது. அவரது படிப்புகளின் விவரம் போன்றவையும்,
இதில் இடம்பெறும். இது, வேலை தருபவருக்கும், வேலை பெறுபவருக்கும் பயன்படும்
அத்தாட்சி.
நாடு முழுவதும் ஆண்டுதோறும் ஐந்து லட்சம் பாஸ்போர்ட் ஒரு
லட்சம் சி.டி.சி., சான்றிதழ்கள் (புதிது, புதுப்பிக்க, டூப்ளிகேட்
சேர்த்து) வழங்கப்படுகின்றன. பாஸ்போர்ட் பெறுவதற்கான எளிமையான வசதி
சி.டி.சி., பெறுவதில் இல்லாததால் இத்துறையை சேர்ந்தவர்கள் இன்னலுக்கு
ஆளாகின்றனர். பாஸ்போர்ட் பெற ஆன்லைனில் விண்ணப்பித்தால் அதிகபட்சம், 45
நாட்களில் பாஸ்போர்ட் கிடைத்து விடுகிறது.
ஆனால், சி.டி.சி.,யை மும்பையில் உள்ள கப்பல் துறை இயக்குனர்
ஜெனரலிடம் மட்டுமே நேரடியாக பெற வேண்டியுள்ளது. கடல்சார் படிப்புகள்
படித்த கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள பல லட்சக்கணக்கானோர் மும்பை
செல்ல வேண்டி உள்ளது. இதனால் கால விரயம் பணச் செலவு ஆகிறது.
இந்தியா சுதந்திரம் பெற்ற போது குறைவான பாஸ்போர்ட்
அலுவலகங்களே இருந்தன. இன்று, 110 பாஸ்போர்ட் அலுவலகங்கள் செயல்படுகின்றன.
ஆனால், 1950ல் ஒற்றை இலக்கங்களில் இருந்த கடல்சார் கல்வி நிறுவனங்களின்
எண்ணிக்கை இன்று 130 ஆக அதிகரித்துள்ளது. இதற்கேற்ப சி.டி.சி., பெறுவதற்கான
அலுவலகங்களை விரிவுபடுத்த கப்பல்துறை அமைச்சகம் முயற்சி எடுக்கவில்லை.
கடந்த, 1958 வணிக கப்பல் சட்ட விதிப்படி சி.டி.சி., வழங்க
மும்பை, கோல்கட்டா, சென்னையில் அலுவலகங்கள் தொடங்கப்பட்டன. 2008ல், மத்திய
கப்பல்துறை இயக்குனரகம் இதை மாற்றி, "அனைத்து சி.டி.சி., பணிகளையும் மும்பை
அலுவலகத்தில் மட்டுமே செய்ய வேண்டும்" என, உத்தரவிட்டது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "சி.டி.சி.,
வழங்குவது, பாஸ்போர்ட் போன்று எளிதானதல்ல. இதற்கு தேவையான இணை
சான்றிதழ்களையும், பாஸ்போர்ட்டையும் சேர்த்து சரிபார்க்க வேண்டும். அதன்
பிறகு தான் இயக்குனர் கையெழுத்திடுவார்" என்றார்.
இதற்கு தீர்வு, சி.டி.சி., பெறுவதற்கான அனைத்து
நடைமுறைகளையும் ஆன்லைன் தொழில்நுட்பத்துக்கு மாற்ற வேண்டும். தனியார்
நிறுவனத்துடன் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தினால் பாஸ்போர்ட் போல
சி.டி.சி., பெறுவதும் எளிதாக மாறும். தேர்வு செய்யப்பட்ட நகரங்களில்
பாஸ்போர்ட் சேவா மையம் போல அலுவலகங்கள் திறந்து வழங்கலாம். மத்திய
கப்பல்துறை அமைச்சகம் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே, கடல்சார்
மாணவர்கள் மற்றும் மாலுமிகளின் கோரிக்கையாக உள்ளது.
No comments:
Post a Comment