மனிதன் தனிமையிலே எதை சிந்திக்கிறானோ அது தான் அவன் குணமாக இருக்கும்
என்பது மனோதத்துவ இயலாளர்களின் கருத்து. படிக்கும் மாணவர்கள், இளைஞர்கள் என
ஒவ்வோருவரும் தாங்கள் சிந்திக்கும் விதத்தாலேதான் வெற்றி அடைகிறார்கள்.
மனிதன் தன் வாழ்வில்
லட்சத்திற்கும் மேற்பட்ட எண்ணங்களைக் கொண்டிருக்கிறான். மனிதனின் சிந்தனை
இடத்திற்கு தகுந்தவாறும், வயதிற்கு ஏற்றவாறும் மாறுகிறது. சிந்தனைகள்
பெரும்பாலும் இப்படி நடந்தால்? அல்லது இப்படி நடக்க வேண்டும் என்பன
போன்றதாகவே இருக்கிறது.
சிறுவன் சிந்தனை செய்யும்பொழுது அவனுக்கு உலகம்
தெரிவதில்லை, பல விஷயங்களும் புரிவதில்லை, ஆகையால் சிறுவனின் சிந்தனைகளானது
கற்பனைக்கு எட்டாத ஒன்றை மையமாக வைத்து பறந்து விரிகிறது.
ஒரு பதின் பருவ மாணவன் சிந்திக்கும்பொழுது, அவன் தனது
படிப்பு, தான் நாயகனாக நினைக்கும் மனிதர், தனது லட்சியக் கனவு என தான்
படித்த பாடங்கள், கதைகள், திரைப்படங்கள் போன்றவற்றை அடிப்படையாக வைத்து
சிந்தனைகளை விரிவுபடுத்துகிறான்.
பள்ளி வாழ்க்கையை முடித்து கல்லூரியில் அடியெடுத்து
வைத்திருக்கும் ஒருவன் கல்வி குறித்த குழப்பங்களுடனும், தன்னால் எதையும்
சாதிக்க முடியும் அதீத தன்னம்பிக்கையுடனான எண்ணங்களைக் கொண்டு அவனது
சிந்தனைகள் அமைகிறது.
கல்லூரிப் படிப்பை முடித்த இளைஞனுக்கு வேலை வாய்ப்பு,
எதிர்காலம் என பயம் நிறைந்த சிந்தனைகளும், தன்னைச் சார்ந்தவர்கள், தனது
பொறுப்புகள் குறித்த கவலைகளே அவன் சிந்தனையில் வெளிப்படுகிறது.
இது போன்ற சிந்தனைகள் ஒரு சாதாரண மனிதன் சிந்திப்பதாகும்.
ஆனால், இது போன்ற சிந்தனைகளை தவிர்த்து மாறுபட்டு சிந்திப்பவர்களும்
இருக்கிறார்கள். அவர்களை முக்கியமாக இரு வகைப்படுத்தலாம். முதல் வகையைச்
சார்ந்தவர்கள் சாதனையாளர்களாகவும், இரண்டாவது வகையைச் சார்ந்தவர்கள்
சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்களுமாக மாறுகிறார்கள்.
அடுத்தவருக்கு துன்பம் விளைவித்து குறுக்கு வழியில்
வெற்றியை அடைய வேண்டும், பலனை பெற வேண்டும் என நினைப்பவர்களின் எண்ணிக்கை
நாளுக்கு நாள் அதிகமாகிறது. இது போன்றவர்களின் எண்ணங்கள் தங்களையும்,
தங்களைச் சார்ந்தவர்களின் முன்னேற்றத்தையும் விரைவாக, அதே நேரம் பிறர்
பாதிப்படைந்தாலும் பரவாயில்லை எனும் நோக்கத்தோடு சிந்தித்து அடைய முயற்சி
செய்வதாக இருக்கும்.
இப்படி சிந்திப்பவர்களால் தான் சமூகக் குற்றங்கள்
அதிகரிக்கின்றன. மற்றொன்று, இது போன்றவர்கள் தங்கள் எண்ணங்களால் விளைந்த
சம்பவங்களால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து பெரும்பாலும்
சிந்திப்பதில்லை.
இரண்டாம் வகையைச் சார்ந்தவர்கள் பொது நலன், தான் என்ன
சாதிக்கலாம், தனது லட்சியங்கள், இவற்ரை அடைந்தால் அடையும் நிலை என அனைத்து
விதமான செயல்பாடுகள் குறித்தும் சிந்திக்கின்றனர். இவர்கள் சமுகத்தின்
வளர்ச்சிக்கு தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்குகின்றனர்.
இன்னும் பல வகைகள் இருக்கின்றன. அவை சிறு சிறு கிளைகளாக
பறந்து விரியும். நமக்கு மிகவும் முக்கியமானது சிந்தனைகள் நல்லவிதமாக
இருக்க வேண்டும், அதன் பயனாய் நன்மைகள் நிறைவாக கிடைக்க வேண்டும்
என்பதுதான். பள்ளி, கல்லூரி மாணவர்களை எடுத்துக்கொண்டால் தங்கள் சிந்தனைகளை
கட்டுப்பாட்டில் வைக்காததாலேயே, வகுப்பில் கவனத்தை சிதறவிடுகின்றனர்.
பாடம் படிக்கும்பொழுது எண்ணங்களை அலைபாய விடுவதனால் பாடத்தை
படிக்க முடியாத சூழ்நிலைக்கும், நினைவில் வைக்க முடியாத நிலைக்கும்
தள்ளப்படுகின்றனர். வீணான எண்ணங்களால் பொழுதுகள் கடந்து போகுமே தவிர,
தேவையான செயல்பாடுகள் நடைபெறாது.
எண்ணங்களை கட்டுப்பாட்டில் வைப்பதற்கு முதலில் நமக்கு
தற்போது எது தேவை? எதிர்காலத்திற்கு என்ன தேவை? அவசரமும், அவசியமுமானது
என்ன? என முதலில் கண்டு கொள்ளுங்கள். தேவை இல்லாத சிந்தனைகளால் அப்போதைக்கு
நன்றாக இருப்பது போன்று தோன்றினாலும், பெரும் மதிப்புள்ள காலத்தை
வீணாக்கிதான் தேவை இல்லாத சிந்தனைகள் தன்னை ஆக்கிரமிக்கின்றன என்பதை
உணர்ந்து கொள்ளுங்கள்.
தங்களின் தற்போதைய தேவை பாடம் படிப்பது என்றால், பாடத்தை
எப்படி படிப்பது என்று மட்டுமே சிந்தியுங்கள், வகுப்பில் இருந்தால்
எதைப்பற்றிய சிந்தனைகளும் தேவையில்லை என்பதை உணர்ந்து, பாடத்தை மட்டுமே
கவனிக்க வேண்டும் என்பதை மட்டுமே நினையுங்கள். தொடர்ந்து நினைக்க, நினைக்க
அச்சிந்தனைகள் உங்களில் வலுப்படுத்தப்பட்டு உங்களை படிப்பின் மேல் ஈடுபாடு
உள்ளவராக மாற்றும்.
தங்கள் சிந்தனைகளால் ஏதேனும் செயல்பாடு நடக்குமா? நடந்தால்
அது நல்ல பயன்களை உருவாக்குமா? அல்லது காலத்தை வீணாக்குமா? என
உங்களுக்குள்ளேயே கேள்விகள் கேட்டு சிந்தனையில் தெளிவு கண்டு வாழ்க்கையில்
வெற்றி காணுங்கள்.
No comments:
Post a Comment