"என்னால் முடியும் என மனப்பூர்வமாக நம்புகிறவர்கள் தான், உலகில்
வெற்றியடைந்துள்ளனர். நம்பிக்கை வந்துவிட்டால், உழைப்பு தானாக வரும். "நாளை
படிக்கலாம்" என தள்ளி வைப்பதுதான் முதல் விரோதி. அதை விட்டொழியுங்கள்;
வாழ்வில் எளிதாக ஜெயிக்கலாம்" என பட்டிமன்ற பேச்சாளரும் கல்வியாளருமான,
பாரதி பாஸ்கர் பேசினார்.
அவர் பேசியதாவது: இலக்கு, விடா முயற்சி, தன்னம்பிக்கையும் யாரிடம்
இருக்கிறதோ அவர்கள்தான் சாதிப்பர். திட்டமிட்டபடி படிக்காமல், நாளை
படிக்கலாம் என சிலர் தள்ளி வைப்பர். அப்படி தள்ளிப்போடுவது தான், முதல்
விரோதி. திட்டமிட்டபடி, அன்றைக்கு எது நடந்தாலும் படித்து முடிப்பேன் என
விடாப்பிடியாக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள்தான், வெற்றியாளர்கள்
வரிசையில் முதல் இடத்தில் இருப்பர்.
எத்தனை மணி நேரம் படிக்கிறோம் என்பது முக்கியமல்ல; இரண்டு மணி நேரம்
படித்தாலும், கவனச்சிதறல் இன்றி படித்தால் நீங்கள்தான் வெற்றியாளர். ஒரு
முறை எழுதுவது, மூன்று முறை படித்ததற்கு சமம். தேர்வுக்காலங்களில்,
நண்பர்களுடன் அதிகம் பேச வேண்டாம்; தேவையில்லாத குழப்பம் வரும். நீங்கள்
படிப்பதற்கெல்லாம் மதிப்பெண் தருவதில்லை; நீங்கள் எழுதியதற்குத் தான்
மதிப்பெண் கிடைக்கும்; அதற்கு, நேர மேலாண்மை முக்கியம்.
"அம்மா துணை... அப்பா துணை... கடவுள் துணை..." என எழுதுவதால், மார்க்
கிடைக்காது. அறிவுரைகள் எரிச்சலாக இருக்கும்; அது இயல்பு தான். நீங்கள்
படுத்திருக்கிற நிலையில் இருந்தால், எழுந்திருங்கள்; எழுந்திருந்தால்
நடக்கத் தொடங்குங்கள்; நடப்பவராக இருந்தால் ஓடுங்கள்; ஓடுபவராக இருந்தால்
குதியுங்கள்; குதிப்பவராக இருந்தால், சிறகடித்துப் பறங்கள்; உலகம் உங்கள்
வசமாகும். இவ்வாறு, அவர் பேசினார்.
No comments:
Post a Comment