மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நடந்துவந்த "தினமலர்" நாளிதழின்
"ஜெயித்து காட்டுவோம்" நிகழ்ச்சி சென்னை நகரில் நேற்று துவங்கியது. சென்னை
பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலை அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று
பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவியர் குவிந்தனர்.
13ம் ஆண்டு நிகழ்ச்சி
"தினமலர்" நாளிதழ் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு தேர்வை எப்படி எழுதினால் அதிக
மதிப்பெண்களை பெற முடியும் என்பதற்கு வழி காட்டும் வகையில்
"ஜெயித்துக்காட்டுவோம்" என்ற நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
13ம் ஆண்டு நிகழ்ச்சி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்து வந்தது.
சென்னை நகரில் நேற்று நிகழ்ச்சி துவங்கியது. "தினமலர்"
நாளிதழ் மற்றும் அப்போலோ கல்வி நிறுவனங்களுடன் இந்திரா குரூப் ஆப் கல்வி
நிறுவனங்கள், தங்கவேலு பொறியியல் கல்லூரி, சென்னை தொழில்நுட்பக் கல்லூரி,
பூர்விகா மொபைல்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்நிகழ்ச்சியை வழங்கின.
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் பத்தாம் வகுப்பு
மாணவ, மாணவியருக்கான நிகழ்ச்சி நேற்று நடந்தது. காலையில் ஆங்கில வழி பிரிவு
மாணவர்களுக்கும், பிற்பகலில் தமிழ்வழி பிரிவு மாணவர்களுக்கும் நிகழ்ச்சி
நடந்தது. காலை நிகழ்ச்சிக்கு அதிகாலை முதலே நகரின் பல்வேறு பகுதிகளில்
இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டு வந்தனர்.
இதனால், பல்கலைக்கழக அரங்கின் அனைத்து இருக்கைகளும் நிரம்பி
வழிந்தன. இதனால், பெற்றோர் மற்றும் ஏராளமான மாணவ, மாணவியர் அரங்கிற்கு
வெளியே அமைக்கப்பட்டிருந்த பந்தலில் அமர்ந்தபடி நிகழ்ச்சியை பார்த்து
குறிப்புகளை எடுத்தனர். அரங்கிற்கு வெளியே மட்டும் 500க்கும் அதிகமான
பெற்றோர் குவிந்தனர். காலை 9:00 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது.
குறிப்புகள் வழங்கிய ஆசிரியர்
அண்ணா நகர், எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி ஆசிரியர்கள், ரேகா யஷ்வந்த்
(அறிவியல் - 1), ஆகோர மூர்த்தி (அறிவியல் - 2), விஜயா (கணிதம்), லலிதா
சுப்ரமணியம் (ஆங்கிலம்), மஞ்சு லலிதா (புவியியல்), ரஜிபால் (வரலாறு),
சுந்தரராமன் (தமிழ்) ஆகியோர் பாடங்கள் சார்ந்து பல்வேறு முக்கிய
குறிப்புகளை மாணவர்களுக்கு வழங்கினர். எந்தெந்த பகுதிகளில் இருந்து அதிக
கேள்விகள் வரும் எந்த கேள்விகளுக்கு எப்படி விடை அளித்தால் அதிக
மதிப்பெண்களை பெற முடியும் என்பது உட்பட, பல்வேறு தகவல்களை மாணவர்களுக்கு
வழங்கினர்.
பிற்பகல் நிகழ்ச்சி
தமிழ்வழி பிரிவு மாணவர்களும், ஏராளமானோர் குவிந்தனர். இந்து
மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஆனந்தன் (அறிவியல்), அரும்பாக்கம் சென்னை
மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் முனிராமையா (கணிதம், ஆங்கிலம்), மயிலாப்பூர்
ராமகிருஷ்ணா உறைவிட உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் தாயுமானவன் (தமிழ்),
முத்தையால்பேட்டை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் முரளி கிருஷ்ணா (சமூக அறிவியல்)
ஆகியோர் மாணவர்களுக்கு பாட குறிப்புகளை விளக்கினர்.
"தினமலர்" நாளிதழ் ஆசிரியர் டாக்டர், இரா.கிருஷ்ணமூர்த்தி,
மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி இறையன்பு மற்றும் கல்வியாளர் ரமேஷ் பிரபா ஆகியோர்
சிறப்பு உரை நிகழ்த்தினர். இன்று, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கான நிகழ்ச்சி
நடக்கிறது.
தொய்வில்லாத முயற்சி தேவை
"ஜெயித்து காட்டுவோம்" நிகழ்ச்சியில் "தினமலர்" நாளிதழின் ஆசிரியர் டாக்டர். இரா.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:
"இந்நிகழ்ச்சியில், பெருந்திரளாக மாணவ, மாணவியர்
பங்கேற்றிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவரை விட
மாணவியர் தான் அதிகளவில் வந்திருக்கின்றனர். இதுபோன்ற காட்சியை 10
ஆண்டுகளாகவே நான் காண்கிறேன். மாணவரை, மாணவியர் "ஓவர்டேக்" செய்கின்றனர்.
இங்கே பரிசு பெற்ற மாணவர்களில் கூட மாணவியர் தான் அதிகம்.
எனவே, மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இல்லை எனில்
உங்களது பரிசுகளையும் மாணவியர் தட்டிச்சென்று விடுவர். படிப்பை முடித்தபின்
பல சாதனைகளை புரியலாம். அதற்கு முயற்சி தேவை. சாதனை நிகழ்த்த தொய்வில்லாத
முயற்சி மிகவும் அவசியம்." இவ்வாறு "தினமலர்" நாளிதழின் ஆசிரியர் பேசினார்.
No comments:
Post a Comment