"பிற பட்டதாரிகளைப் போல, பி.எல்., (5 ஆண்டு) முடித்தவர்களையும் சமமாக
கருதி, அரசுப் பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும்" என மதுரை ஐகோர்ட் கிளை
உத்தரவிட்டது.
ஒட்டன்சத்திரம் அருகே சி.வேலூர்
சதீஷ் தாக்கல் செய்த மனு: பி.எல்., (5 ஆண்டுகள்) படித்துள்ளேன். நகராட்சி
கமிஷனர், சார்பதிவாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் பணியிடங்களை நிரப்ப,
டி.என்.பி.எஸ்.சி., 2009 நவ., 15ல் அறிவிப்பு வெளியிட்டது. நான், 2010
ஏப்., 11ல் எழுத்துத் தேர்வு; 2011 மார்ச் 24ல் வாய்மொழித் தேர்வில்
பங்கேற்றேன். மொத்தம், 340க்கு, 273 மதிப்பெண் பெற்றேன்.
நான் பிற்பட்ட வகுப்பை சேர்ந்தவன். அதே வகுப்பை சேர்ந்த ஒருவர், 213.5
மதிப்பெண் பெற்றிருந்தார். அவரை பணிக்கு தேர்வு செய்தனர்.
டி.என்.பி.எஸ்.சி., 2011 அக்., 7ல் வெளியிட்ட, தற்காலிக தேர்வு பட்டியலில்,
என் பெயர் இல்லை.
டி.என்.பி.எஸ்.சி., செயலரிடம் கேட்டபோது, "பி.ஏ.,- பி.எஸ்சி., போன்ற
பட்டப்படிப்பு முடித்திருந்தால் மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும். பி.எல்.,
(5 ஆண்டு) பட்டத்தை, பிற பட்டப்படிப்புகளுக்கு இணையாக கருத முடியாது" என,
நிராகரித்தார். "அந்த உத்தரவு செல்லாது" என அறிவித்து பட்டியலில் என் பெயரை
சேர்க்கவும், திருத்தம் செய்யப்பட்ட புதிய பட்டியல் வெளியிடவும் உத்தரவிட
வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி எஸ்.தமிழ்வாணன் முன், மனு விசாரணைக்கு வந்தது. பின், நீதிபதி
பிறப்பித்த உத்தரவு: பி.ஏ., - பி.எஸ்சி., பட்டங்களுக்கு முன்னுரிமை
வழங்குவது போல், பி.இ., - எம்.பி.பி.எஸ்., - பி.வி.எஸ்சி., - பி.எல்., (5
ஆண்டு) படிப்பு முடித்தவர்களையும் சமமாகக் கருதி, பணியில் வாய்ப்பு வழங்க
வேண்டும் என 1997ல் அரசு உத்தரவிட்டது.
மனுதாரர் பிரச்னையில், டி.என்.பி.எஸ்.சி., மாறுபட்ட நிலையை எடுக்க
முடியாது. மனுதாரரை விட குறைந்த மதிப்பெண் பெற்றவருக்கு வாய்ப்பு
வழங்கப்பட்டுள்ளது. அதிக மதிப்பெண் பெற்றுள்ள மனுதாரருக்கு வாய்ப்பு
மறுப்பது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டிற்கு எதிரானது.
மனுதாரர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பட்டியலில் தகுதியான இடத்தில்
அவரது பெயரை சேர்க்க வேண்டும். தகுதி அடிப்படையில் மனுதாரருக்கு பணி வழங்க
டி.என்.பி.எஸ்.சி., செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி
உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment