"பள்ளி மற்றும் வீடுகளில் குழந்தைகளுக்கு தரப்படும்
தண்டனைகளில் மாற்று முறைகளை கையாள வேண்டும்" என, குழந்தைகளுக்கான
நலக்குழுமம் தெரிவித்துள்ளது.
பள்ளி, வீடுகளில் குழந்தைகளுக்கு தரப்படும் தண்டனைகள்
குறித்து மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டது. கல்வி உரிமைச் சட்டப்படி
பள்ளிகளில் அடிப்பது (கார்போரல் பனிஷ்மென்ட்) போன்ற செயல்களில்
ஈடுபடக்கூடாது, என தெரிவிக்கப்பட்டது.
மாணவர்களை அடிப்பதன் மூலம் உடலை காயப்படுத்துகின்றனர். தகாத
வார்த்தைகள், கெட்ட வார்த்தைகளை பேசுவதன் மூலம் அவர்களின் மனத்தை
காயப்படுத்தி சுயமதிப்பீட்டை இழக்கச் செய்கின்றனர். இன்னமும் நிறைய
பள்ளிகளில் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது என மதுரை மாவட்ட குழந்தைகள்
நலக் குழுத் தலைவர் ஜிம் ஜேசுதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: "மாணவிகள் தாமதமாக வந்தாலோ, விடுப்பு
எடுத்தாலோ, அவர்களை காயப்படுத்தும் வகையில் கேள்வி எழுப்பும் ஆசிரியர்கள்
தற்போதும் உள்ளனர். இந்த மாணவர் இப்படித் தான் என ஆசிரியர்கள் முத்திரை
குத்துவதால் அவர்களின் நடத்தை மேலும் மோசமாகிறது. பெரியவர்களை திட்டினால்,
அடித்தால் அவமானமாக கருதுகிறோம். குழந்தைகளும் அதேபோல தான். ஆனால்,
எதிர்த்து குரல் கொடுக்க இயலாத நிலையில் நலிவுற்றவர்களாக அவர்கள் உள்ளனர்.
தவறுக்கு தண்டனை என்பது அடியாக இருப்பதால் வன்முறையின்
மூலம் தான் தீர்வு கிடைக்கும் என்ற கலாசாரத்தை கற்றுத் தருகிறோம்.
இக்குழந்தை வளர்ந்தால் இதே மனோபாவத்துடன் தான் வளரும். சரி, தவறு என்பதை
மழலைப் பருவத்தில் கற்றுத்தரவேண்டும். அடிப்பதன் மூலம் எந்த பிரச்னையும்
சரியாகாது என்பதை மனதில் கொண்டு, குழந்தைகளை வழிநடத்த வேண்டும். இதற்கு
பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு மாணவர்களை எப்படி கையாள்வதென சிறப்புப் பயிற்சி
அளிக்க வேண்டும்" என்றார்.
No comments:
Post a Comment