சத்துணவு மையங்களில் காலியாக உள்ள அமைப்பாளர், சமையலர் மற்றும் உதவியாளர்
பணியிடங்கள் இன்னும், 20 நாட்களில் நிரப்பப்பட உள்ளது. இதற்கான நேர்முக
தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, பணி நியமன உத்தரவு தயார் நிலையில் உள்ளது.
ஏழை, எளிய குழந்தைகள் பயன்பெறும் வகையில் ஆரம்பப்பள்ளி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், மாவட்ட அளவில், 1,289 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகிறது. இம்மையங்களில் சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் உதவியாளர் என, 3,867 பணியிடங்கள் உள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 14 யூனியனில் தாளவாடி, மொடக்குறிச்சி, சென்னிமலை மற்றும் கொடுமுடி ஆகிய யூனியனில் மட்டும் சத்துணவு மையங்களில் காலியிடங்கள் இல்லை.
ஆறு யூனியன்களில் ஓய்வு, மாறுதல் மற்றும் திடீர் மரணம் போன்றவற்றால் ஏற்பட்ட, 196 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது.
இதனால், குழந்தைகளுக்கு குறிப்பிட்ட நேரத்துக்குள் சத்துணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதை தவிர்க்கும் பொருட்டு, சத்துணவு சாப்பிடும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள மையங்களை, அருகில் உள்ள மைத்துடன் இணைத்தனர்.
ஆள் பற்றாக்குறை சமன் செய்வதுடன், குறிப்பிட்ட நேரத்துக்கு குழந்தைகளுக்கு சத்துணவு வழங்க முடியும் என்பதால், இதற்கான கணக்கெடுப்பு நடத்த மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளுக்கு யோசனை வழங்கியது.
மேலும் காலியாக உள்ள பணியிடத்தை, கடந்த ஓராண்டுக்கு முன் நிரப்ப அரசு மேற்கொண்ட நடவடிக்கையில், பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், காலிப்பணியிடத்தை நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து, பணியிடம் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தற்போது, 196 காலிப்பணியிடத்துக்கும் நேர்முக தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து கலெக்டர் நேர்முக உதவியாளர் கலாவதி கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள, 196 பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு நடத்தப்பட்டு, பணி நியமனம் வழங்கப்பட உள்ளது.
இன்னும், 20 நாட்களில் பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் மூலம் காலிப்பணியிடம் நிரப்பபடும், என்றார்.
சத்துணவு யைத்தில், 25 குழந்தைகளுக்கு குறைவாக இருந்தால், அருகில் உள்ள சத்துணவு மையத்துடன் இணைக்கும் திட்டத்தை அரசு அறிவித்தது. சத்துணவு மையங்களில் உள்ள காலிப்பணியிடத்தை நிரப்பிய பின், சத்துணவு மையங்கள் இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என தெரிகிறது.
No comments:
Post a Comment