மாநில அரசுகள் உயர்கல்வியை மேம்படுத்துவதில்,
போதியளவு சிரத்தை எடுத்து செயல்படவில்லை என்று யு.ஜி.சி., சேர்மன் வேத்
பிரகாஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: உயர்கல்வித் துறையில் தனியாரின்
மிகப்பெரிய பங்களிப்பை யு.ஜி.சி., வரவேற்கிறது. மாநில உயர்கல்வித்
துறைக்கு, அகடமிக், நிர்வாகம் மற்றும் நிதி ரீதியாக, சிறப்பான முறையிலான
உதவி தேவைப்படுகிறது.
உயர்கல்வி நிறுவனங்களை மேம்படுத்துவதில், மத்திய அரசு ஆர்வமாக
செயல்படும் அதே வேளையில், மாநில அரசுகளுக்கு அந்த ஆர்வம் இருப்பதில்லை.
RUSA திட்டத்தின் கீழ், பல்கலைகளுக்கு, ரூ.25000 கோடியை ஏற்கனவே மத்திய
அரசு ஒதுக்கியுள்ளது.
RUSA திட்டத்திற்கு முன்பாக, எந்த மத்திய அரசு நிதி திட்டமும்,
உயர்கல்விக்கு வழங்கப்பட்டதில்லை. எனவே, இந்த திட்டத்தின் நோக்கம், மாநில
உயர்கல்வி அமைப்பை வலுப்படுத்துவதுதான். வரும் 2017ம் ஆண்டில், நாட்டின்
ஒட்டுமொத்த உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் 30% என்ற அளவில் உயரும்.
சிலர் இந்த இலக்கு 2020ம் ஆண்டுதான் அடையப்படும் என்கின்றனர்.
தற்போதைய நிலையில், ரெகுலர் முறையிலான உயர்கல்வியில், 2 கோடி மாணவர்கள்
சேர்க்கை பெறுகிறார்கள். அதேசமயம், திறந்தநிலை மற்றும் அஞ்சல்வழி கல்வியில்
46 லட்சம் மாணவர்கள் சேர்க்கை பெறுகிறார்கள்.
2 கோடி என்ற அந்த எண்ணிக்கை 2 கோடியே 9 லட்சம் என்ற அளவிற்கும், 46
லட்சம் என்ற அந்த எண்ணிக்கை, 65 லட்சம் என்ற அளவிற்கும் உயரும். ஆராய்ச்சி
மற்றும் புத்தாக்க நடவடிக்கைகளில், அதிகமான வளங்கள் ஈடுபடுத்தப்பட
வேண்டும்.
புதிய கல்வி நிறுவனங்களை ஏற்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்தாமல்,
சரியான கல்வித் திட்டங்களை நோக்கி, மாணவர்களுக்கு வழிகாட்டுவது மிகவும்
முக்கியம். கடந்த சில ஆண்டுகளில், உயர்கல்விக்கென்று, இந்தியா அதிகம்
செலவழித்து வருகிறது. இக்காலகட்டத்தில், இந்தியாவைப் போன்று, வேறு எந்த
நாடும் இவ்வளவு செலவு செய்யவில்லை என்று கூறலாம். உலகளவில் நிலவும் நிதி
நெருக்கடியிலும், கல்விக்கான முதலீடு இங்கே குறைக்கப்படவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment