பீகாரில், ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட தகுதித் தேர்வில், 10 ஆயிரம்
ஆசிரியர்கள் தேர்ச்சி பெறவில்லை. இவர்களுக்காக மீண்டும் ஒரு தேர்வு
நடத்தப்படும். அதிலும், தேர்ச்சி அடையாவிட்டால், பணியில் இருந்து அவர்கள்
"டிஸ்மிஸ்" செய்யப்படுவர் என அம்மாநில கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்து
உள்ளனர்.
பீகார் மாநில கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: மாணவர்களின் கல்வித்
திறனை மேம்படுத்துவதற்காக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, ஆசிரியர்களின் தகுதியை தெரிந்து கொள்வதற்காக,
சமீபத்தில், மாநிலம் முழுவதும் உள்ள, 43,447 ஆசிரியர்களுக்கு தகுதித்
தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு, ஆங்கிலம்,
கணிதம், இந்தி, பொது அறிவு ஆகியவை தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
இதில், 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள், தோல்வி அடைந்துள்ளனர்.
இவர்களுக்கு, தங்களின் தகுதித் திறனை அதிகரிக்கும்படி,
அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்களுக்காக, மீண்டும் ஒரு தேர்வை நடத்தவும்,
முடிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது முறையும் தோல்வி அடைவோர்,
பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவர். இவ்வாறு, அந்த அதிகாரிகள்
தெரிவித்தனர்.