கடந்த 20 ஆண்டுகளை எடுத்துக்கொண்டால், பள்ளிக்
குழந்தைகள் கண்ணாடி அணியும் எண்ணிக்கை பல மடங்கு பெருகியுள்ளது. பல
பெற்றோர்களுக்கு, தங்கள் குழந்தைகளின் கண்பார்வை பாதிப்பு குறித்து
போதியளவு விழிப்புணர்வு இல்லை என்பது ஒரு கசப்பான உண்மை.
எனவே, குழந்தைகளுக்கு ஏற்படும்
கண் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அவர்களின் கண்ணொளியை காத்தல் உள்ளிட்ட
பல கேள்விகளுக்கு இக்கட்டுரை பதிலளிக்கிறது.
குழந்தைக்கு கண்ணாடி தேவை என்பதை பெற்றோர் எவ்வாறு உறுதி செய்வது?
ஒரு குழந்தை, தனது பார்வை தெளிவாக இல்லை என்பதைப் பற்றி அரிதாகவே, தன்
பெற்றோரிடம் புகார் தெரிவிக்கும். அடிக்கடி தலை வலிக்கிறது மற்றும் கண்
வலிக்கிறது என்று தெரிவித்தாலோ அல்லது ஒரு அம்சத்தை தெளிவாக பார்க்கும்
பொருட்டு, கண்களை பாதியாக சுருக்கினாலோ, உடனடியாக ஒரு நல்ல கண்
மருத்துவரிடம் உங்கள் குழந்தையை அழைத்துச்செல்ல வேண்டும்.
கண் பார்வை பிரச்சினையுள்ள குழந்தைகள், ஒரு விஷயத்தைப் படிக்கையில், கண்
அருகே வைத்துக்கொண்டு படிப்பார்கள். மேலும், வகுப்பறையின் கரும்பலகையில்
உள்ள விஷயத்தைப் பார்த்து, தனது நோட்டில் எழுத மிகுந்த சிரமப்படுவார்கள்.
மேற்கூறிய குறைபாடு உள்ள குழந்தைகளை எவ்வாறு கையாள வேண்டும்?
மருத்துவரிடம் அழைத்துச் செல்வதை ஏதேனும் காரணம் சொல்லி
தள்ளிப்போடக்கூடாது. தள்ளிப்போடுவதன் மூலமாக, உங்கள் குழந்தையின் சிக்கல்
அதிகரிக்கத்தான் செய்யும். பல பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் கண்ணாடி
அணிவதை விரும்புவதில்லை.
குழந்தைகள் பள்ளிக்கு செல்ல தொடங்கியவுடன், ஆண்டிற்கு ஒருமுறை கட்டாயம்
கண் மருத்துவரைப் பார்த்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். உங்கள் குழந்தை
கண் தொடர்பான எந்த பிரச்சினையையும் வெளிப்படுத்தவில்லை என்றாலும்கூட,
வருடாந்திர பரிசோதனை பல எதிர்கால நன்மைகளுக்கு அடிப்படையான ஒன்றாகும்.
பல கண் பிரச்சினைகளுக்கு அடிப்படை காரணங்கள் யாவை?
ஊட்டச்சத்து குறைபாடு, கணினி, தொலைக்காட்சி ஆகியவற்றில் நீண்டநேரம்
செலவிடுதல், ஜீன் தொடர்பான குறைபாடுகள், சுற்றுச்சூழல் குறைபாடுகள்,
கண்களின் வளர்ச்சியின்போது ஏற்படும் மாறுதல்கள் உள்ளிட்ட பல காரணிகள், கண்
சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.
கண்பார்வை கோளாறுகள் வருமுன் காத்துக்கொள்வது எப்படி?
வைட்டமின் ஏ சத்து நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு தவறாமல் ஊட்ட
வேண்டும். காரட் மற்றும் பச்சைக் காய்கறிகள் முக்கியமானவை. மேலும், சூரிய
ஒளியில் தேவையான அளவு உங்களின் குழந்தைகளை விளையாட அனுமதிக்கவும்.
அப்போதுதான், வைட்டமின் ஏ மற்றும் டி போன்றவை கிடைக்கும்.
உங்கள் குழந்தை படிக்க அமரும் இடம் நல்ல வெளிச்சமாக இருக்கிறதா,
வெளிச்சம் கண்களில் நேராக படாமல் இருக்கிறதா என்று பார்த்து அமர வைக்க
வேண்டும். வெயிலில் வெளியே செல்லும்போது, UV கதிர்களிலிருந்து
பாதுகாத்துக்கொள்ளும் வகையில் சன் கிளாஸை உங்கள் குழந்தை அணியச் செய்து
அழைத்துச்செல்ல வேண்டும்.
தொலைக்காட்சி மற்றும் கணினி முன்பாக உங்களின் குழந்தை அமரும் நேரத்தை
முடிந்தளவு குறைக்க வேண்டும். கண்களுக்கு சமமான உயரத்தில் தொலைக்காட்சியின்
திரை இருக்கும்படி இருப்பது நல்லது மற்றும் குறைந்தபட்சம், தொலைக்காட்சிப்
பெட்டியிலிருந்து 6 அடி தூரம் வரை தள்ளி அமர்ந்து பார்க்கச் செய்ய
வேண்டும். ஒரு நாளைக்கு 2 மணி நேரத்திற்கு மேலாக தொலைக்காட்சிப் பார்க்க
அனுமதிப்பது நல்லதல்ல மற்றும் அதையும் தொடர்ச்சியாக செய்ய அனுமதிப்பதும்
நல்லதல்ல.
கண்களுக்கான பயிற்சிகள் பற்றி?
கண்ணுக்கான பயிற்சிகள், கண்ணின் தசைகளை வலுப்படுத்துகின்றன. உங்கள்
குழந்தை மிகவும் தீவிரமாக படித்துக் கொண்டிருக்கையில், அவ்வப்போது கண்களை
நன்றாக சிமிட்டுமாறு சொல்ல வேண்டும். இதன்மூலம் கண்களுக்கு நல்ல ஈரப்பசை
கிடைத்து, கண் எரிச்சலும், அரிப்பும் ஏற்படாது.
மேலும், இத்தகைய பயிற்சிகளின் மூலம் ஒருவர் தெளிவாகவும், கவனமாகவும்
பார்க்க முடியும். மேலும், கண் மருத்துவர், உங்கள் குழந்தையின்
நிலைமைக்குத் தக்கவாறு, தேவையான கண் பயிற்சிகளையும் பரிந்துரை செய்வார்.
கண் கண்ணாடிகளைப் பற்றி...
கண் பார்வை மோசமானதொரு நிலையில் இருந்தால், கண் கண்ணாடி அவசியம் தேவை.
அதற்கு வயது வித்தியாசமெல்லாம் கிடையாது. குழந்தைகளுக்கு ஏற்ற வகையிலான கண்
கண்ணாடிகள், பல வண்ணங்களில் இன்று கிடைக்கின்றன. பிளாஸ்டிக் கண்ணாடிகள்,
பயன்படுத்துவதற்கு எளிதாகவும், நீண்டகாலம் உழைக்கக்கூடியதாகவும் உள்ளன.
எனவே, கண்ணாடி அணியும் தேவை ஏற்பட்டால், எந்த தயக்கமோ, கூச்சமோ இல்லாமல்
அவற்றை பயன்படுத்துமாறு உங்கள் குழந்தைகளிடம் கூறுங்கள். கண் கண்ணாடிகள்
அணிவதற்கு, பெரியவர்களைவிட, குழந்தைகள் எளிதாக பழகி விடுவார்கள்.
ஏனெனில், தங்களின் பார்வையில் ஏற்படும் வித்தியாசத்தை அவர்கள் எளிதில்
உணர்வார்கள். அதேசமயம், contact lense பயன்படுத்தலாம் என்று விரும்பினால்,
அவற்றை தகுந்த முறையில் பாதுகாப்பாக கையாளும் பக்குவமும், வயதும் உங்கள்
குழந்தைக்கு வந்த பின்னர்தான் பயன்படுத்த தொடங்க வேண்டும்.
No comments:
Post a Comment