பள்ளி, கல்லூரிகளில் நீதிபோதனை வகுப்புகளை துவக்க வேண்டும்
என பாளை.,யில் நடந்த சைவ சபை முப்பெரும் விழாவில் தருமை ஆதீனம் குமாரசாமி
தம்பிரான் சுவாமிகள் பேசினார்.
பாளை., சைவ சபை சார்பில் திருக்குறள் தொடர் சொற்பொழிவு
நிறைவு விழா, நூல் வெளியீட்டு விழா மற்றும் பாராட்டு விழா என முப்பெரும்
விழா பாளை., கிறிஸ்துராஜா பள்ளியில் நடந்தது.
தருமை ஆதீனம் மவுன குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் ஆசியுரை வழங்கி பேசியதாவது:
"நமது நாடு எத்தனையோ புகழ்களை கொண்டதாக இருந்தாலும், இந்த
நாட்டிற்கு, உலகுக்கு வள்ளுவனை கொடுத்தது தென் தமிழகம் தான். குமரியில்
தான் வள்ளுவன் பிறந்தான் என ஒரு ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது. வள்ளுவன்,
பாரதி, குமரகுருபரன், வில்லியம் பலவானர் ஆகியோரையும் தென்தமிழகம்
கொண்டுள்ளது.
தற்காலத்தில் பாலியல் வன்முறைகள் அதிகரித்துவிட்டன. இதற்கு
நீதி படிப்பு இல்லாதது, நீதிபோதனைகள் இல்லாதது தான் காரணம். மேலும் கல்லூரி
முதல்வரை மாணவரே கொலை செய்யும் வன்முறை கலாச்சாரமும் நடந்து கொண்டு தான்
இருக்கிறது. மாணவர்கள் ஆயுதங்களை எடுக்கக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது.
பள்ளி, கல்லூரிகளில் நீதிபோதனைகளை வகுப்புகளை துவக்கி
மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டும். அப்போது தான் இதுபோன்ற சம்பவங்கள்
நிகழாமல் தடுக்கலாம்." இவ்வாறு குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் பேசினார்.
திருக்குறளில் சைவ சித்தாந்தம் என்ற நூலை சென்னை ஐகோர்ட்
நீதிபதி ராமசுப்பிரமணியன் வெளியிட்டு பேசுகையில், "சட்டம் என்பது வேறு,
நீதி என்பது வேறு. நீதி, நியாயம் என்ற சொல் தமிழ் சொல் அல்ல. நீதி என்ற
சொல் 4ம் அல்லது 7ம் நூற்றாண்டுகளில் தமிழ் மொழி உள்வாங்கி கொண்டது என
ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். சட்டம் என்ற சொல், ஒரு சமூகத்தில் எதை
செய்யலாம், எதை செய்ய கூடாது என வரையறுக்கக்கூடியது தான் சட்டம். நீதி
தனிமனித வாழ்க்கையில் ஒழுக்கத்தை கடைபிடிப்பதை நீதியாக சொல்லலாம்."
என்றார்.
No comments:
Post a Comment