சேலம் மாவட்ட மைய நூலகத்துக்கு 500க்கும் மேற்பட்ட
பதிப்பகங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட ஒன்றரை லட்சம் புத்தகம்
நூலகங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளன.
பொதுவாக அனைவருக்கும் நூலக அறிவு தேவைப்படுகிறது. ஒவ்வொரு
கல்லூரியிலும் நூலகம் செயல்படுகின்றது. நூலகத்தை சரியான முறையில்
பயன்படுத்தினால், நிச்சயம் மாணவர்கள் வெற்றி பெறுவர். தற்போது பல தனியார்
பள்ளிகளில் நூலகங்கள் செயல்பட ஆரம்பித்துள்ளன. பாடங்களில் கேட்கப்படும்
கேள்விகள் தவிர, மற்ற கேள்விகளுக்கு உரிய பதில்களை நூலகத்தில் உள்ள
புத்தகங்களில் இருந்து பெற முடியும்.
சேலம் மாவட்ட மைய நூலகத்துக்கு லட்சக்கணக்கில் புது
புத்தகங்கள் வந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் உள்ள நூலகத்துறை
இயக்குனரக அலுவலகத்தில் இருந்து புதிய புத்தகங்கள் வருவதுண்டு. இந்தாண்டு,
543 பதிப்பகங்களில் இருந்து ஒன்றரை லட்சம் புத்தகம், சேலம் மாவட்டத்துக்கு
என, ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்துள்ளன. 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதிய
புத்தகங்கள் வந்துள்ளன.
இங்கிருந்து சேலம், எடப்பாடி, ஓமலூர், சங்ககிரி,
கெங்கவல்லி, ஆத்தூர், மேட்டூர், வாழப்பாடி, ஏற்காடு ஆகிய தாலுகாவில் உள்ள,
160 நூலகங்களுக்கு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்ட மைய நூலகர் மாதேஸ்வரன் கூறியதாவது: "சேலம்
மாவட்டத்தில் உள்ள நூலகங்களில் இரண்டு லட்சத்து 71,000 உறுப்பினர்கள்
உள்ளனர். 3,354 புரவலர்கள் உள்ளனர். மாவட்ட மைய நூலகத்தில் மட்டும் 55, 127
பேர் ஆண்டு சந்தாவாக 60 ரூபாய் செலுத்தி புத்தகங்களை படித்து வருகின்றனர்.
தற்போது பள்ளி மாணவர்களை உறுப்பினர்களாக சேர்க்கும் பணியில்
ஈடுபட்டு வருகிறோம். இந்தாண்டு மட்டும் 10,000 மாணவர்களை நூலக
உறுப்பினர்களாக சேர்த்து, தற்போது 25,000 மாணவர்கள் உறுப்பினர்களாக
உள்ளனர். நவம்பர் 14 முதல் 20ம் தேதி வரை தேசிய நூலக வார விழா
கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மாணவ, மாணவியருக்கு நூலக அறிவை
ஏற்படுத்தும் வகையில் பல்வேறு அறிவுத்திறன் போட்டி நடத்தப்படும்." இவ்வாறு
அவர் கூறினார்.
No comments:
Post a Comment