மாணவர்களுக்கு உழைப்பு, முயற்சி, தன்னம்பிக்கை மிக முக்கியம்;
திட்டமிட்டு படித்தால் வெற்றி நிச்சயம்" என, மேட்டுப்பாளையத்தில் தினமலர்
நாளிதழ் சார்பில் நேற்று நடந்த, "ஜெயித்துக் காட்டுவோம்" நிகழ்ச்சியில்,
ஆசிரியர்கள் அறிவுரை கூறினர்.
மேட்டுப்பாளையத்தில்,தினமலர்
நாளிதழ், டி.வி.ஆர்., அகாடமி மற்றும் கோவை எஸ்.என்.எஸ்., கல்வி நிறுவனங்கள்
சார்பில், கடந்த இரு நாட்கள் "ஜெயித்துக் காட்டுவோம்" நிகழ்ச்சி நடந்தது.
இ.எம்.எஸ்., திருமண மண்டபத்தில் இரண்டாவது நாளான நேற்று பத்தாம் வகுப்பு
மாணவர்களுக்கு நிகழ்ச்சி நடந்தது.
தமிழ் வழி மாணவர்களுக்கு மேட்டுப்பாளையம் தாலுகாவில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், ஆலோசனையும், அறிவுரையும் வழங்கினர்.
அருள்சிவா, அரசு மேல்நிலைப்பள்ளி வெள்ளியங்காடு (தமிழ்): எது கடினம் என
நினைக்கிறாயோ, அது கடினமாகத்தான் இருக்கும். எது எளிது என்று நினைக்கிறாயோ,
அது எளிதாக இருக்கும். திருக்குறள் மனப்பாட செய்யுளை, புத்தகத்தில் உள்ளது
போன்று, தேர்வில் எழுத வேண்டும். இலக்கண வினாக்கள் எழுதும் போது, முக்கிய
வார்த்தை, எழுத்தை கருப்பு மையால் அடிகோடு போட வேண்டும்.
கவிதா, அரசு மேல்நிலைப்பள்ளி, மேட்டுப்பாளையம் (ஆங்கிலம்): ஆங்கிலப்
பாடம் கடினம் என்று, நினைப்பதை தவிர்க்க வேண்டும். முதல் மூன்று மனப்பாட
பாட்டை நன்கு படிக்க வேண்டும். தேர்வில் கவிதை எழுதும் போது, அதன் தலைப்பு
எழுத வேண்டும். எல்லா கேள்விகளுக்கும் பதில் எழுதிப் பழக வேண்டும்.
பிரேமா, அரசு உயர்நிலைப்பள்ளி, கன்னார்பாளையம் (கணிதம்): உழைப்பு,
முயற்சி, தன்னம்பிக்கை ஒருவருக்கு மிக முக்கியம். திட்டமிட்டு படித்தால்
வெற்றி நிச்சயம். இன்று முதல் தினமும் இரண்டு மணி நேரம், கணக்குகளை போட்டு
பார்க்க வேண்டும். முதலில் கேள்வியை நன்கு படித்து பார்த்து, அதற்கு தகுந்த
முறையில் கணக்கு போட வேண்டும். சூத்திரங்களை எழுதி வைத்து, ஓய்வு
நேரத்தில் படித்து நினைவில் வைக்க வேண்டும்.
மங்கையற்கரசி, நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மேட்டுப்பாளையம்
(அறிவியல்): முடியும், முடியும், என்னால் மட்டுமே முடியும் என்று தினமும்,
உங்களுக்குள்ளே சொல்லிக் கொள்ள வேண்டும். வேதிச் சமன்பாடு கட்டம் போட்டு
காட்ட வேண்டும். தவறு சுட்டிக் காட்டும் விடை எழுதும் போது, கேள்வியை
எழுதி, அதில் உள்ள தவறை, கருப்பு மை பேனாவால் அடிகோடு போட்டு காட்டவும்.
மஞ்சுளா, அரசு மேல்நிலைப்பள்ளி மேட்டுப்பாளையம் (சமூக அறிவியல்): வரலாறு
பாட கேள்வி எழுதும் போது, தேவையான இடத்தில் அவசியம் ஆண்டை குறிப்பிட
வேண்டும். தவறாக குறிப்பிட்டால், இரண்டு மதிப்பெண் குறைக்கப்படும். எனவே
ஆண்டு தெரியவில்லை என்றால், குறிப்பிட வேண்டாம்.வரலாற்று நிகழ்வு
வினாவுக்கு, அவசியம் ஆண்டை குறிப்பிட வேண்டும். நிறைய "மேப்&'களை
வாங்கி பயிற்சி எடுக்க வேண்டும்.
"டிவி&'யை மூட்டை கட்டி வையுங்க: ஆங்கில வழி மாணவர்களுக்கு, கோவை எஸ்.பி.ஓ.ஏ., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் குழுவினர், ஆலோசனை வழங்கினர்.
அன்வர் பாட்ஷா (தமிழ்): பொதுத் தேர்வு முடியும் வரை, "டிவி"யை மூட்டை
கட்டி வையுங்க. முயற்சியும், பயிற்சியும், தொடர்ச்சியாக செய்தால், வெற்றி
நிச்சயம். பெற்றோர் முன்பு படிப்பது போல் நடித்தால், படிப்பு வராது. சத்தம்
போட்டும், எழுதிப்பார்த்தும் படிக்க வேண்டும். ஆசிரியர் பாடத்தைத்தான்
நடத்த முடியும்; தேர்வு எழுத முடியாது.
சந்தியா பாய் (ஆங்கிலம்): முதல் தாள் கேள்விகள் பாடத்தில் இருந்து
வருவதால், அதை புரிந்து நன்கு மனப்பாடம் செய்து படிக்க வேண்டும். இதில்
பிரிட்டிஷ், அமெரிக்கன், ஒருமை, பன்மை ஆகிய வார்த்தைகளை அவசியம்
படிக்கவும். இரண்டாம் தாளில் 35 மதிப்பெண்கள் பாட பகுதியிலும், மீதமுள்ள 65
மதிப்பெண்கள் பொதுப் பாடத்தில் இருந்து வரும். திருந்தா படிவம், திருந்திய
படிவம் என்று எழுதி, அதில் திருந்தா படிவத்தை அடிக்க வேண்டும். தமிழாக்கம்
வினா ஐந்து வாக்கியம் இருக்க வேண்டும்.
லதாமணி (கணிதம்): கணக்கை மனப்பாடம் செய்ய வேண்டாம்; புரிந்து திரும்ப
திரும்ப போட்டு பார்க்க வேண்டும். பழைய பொதுத் தேர்வு கேள்வித்தாள்களை
வைத்து, தேர்வு எழுதி பார்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் நீங்கள் கணக்கில்
100க்கு 100 மதிப்பெண் எடுக்க முடியும்.
சுஜாதா (அறிவியல் 1): தேவையான வினாவுக்கு அவசியம், பார்முலாவும்,
தீர்வும், உதாரணத்துடன் தெளிவாக எழுத வேண்டும். கேள்வியில் முதல் இரண்டு
வார்த்தையை படித்து, தவறாக புரிந்து கொண்டு, விடை எழுத வேண்டாம். எனவே,
கேள்வியை நன்கு படித்து புரிந்து, அதற்கு தகுந்த முறையில் வினா எழுத
வேண்டும்.
கீதா மோகன் (அறிவியல் 2): படிக்கும்போது சிறிய நோட்டு போட்டு, குறிப்பு
எழுதி வைக்க வேண்டும். படித்து முடிந்த பின் சிறிது நேரம், படித்ததை
திரும்ப நினைத்து பார்க்க வேண்டும். பாடத்தை நன்கு படித்து, அதில் கேள்வி
வரும் பகுதிகளை நீங்களே எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். உயிரியல் பாடத்தை
பொறுத்தவரை, படம் மிக அவசியம்.
ஜெயந்தி (வரலாறு): பெரிய வினாவை எழுதும் போது "கீ&' வார்த்தைக்கு,
அடிகோடு போட வேண்டும். மேப்பில் இடத்தின் பெயரை குறிக்கும் போது, புள்ளி
வைத்து எழுத வேண்டும். எல்லோராலும் வரலாறு பாடத்தில் வெற்றி பெற முடியும்.
அதற்கு திட்டமிட்டு படிக்க வேண்டும்.
ஸ்ரீஜா (புவியியல்): வேறுபாடு கேள்விக்கு, ஒரு பக்கம் எழுதுவதற்கு
தொடர்புடையதாக, மறு பக்கம் இருக்க வேண்டும்; மாற்றி மாற்றி எழுதக் கூடாது.
முடிந்தவரை பாடப்புத்தகத்தில் இருப்பது போல் எழுதினால் முழு மதிப்பெண்
கிடைக்கும். பெரிய வினாவுக்கு பாயின்ட் போட்டு எழுதினால், முழு
மதிப்பெண்கள் கிடைக்கும்.
No comments:
Post a Comment