குழந்தைப் பருவத்திற்கும், வளர் இளம் பருவத்திற்கும் இடையேயான ஒரு
பருவம் உள்ளது. இதனை ஆங்கிலத்தில் ட்வீன் என்று அழைப்பர். 11 வயது முதல் 13
வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் இதற்குள் அடக்கம்.
இந்த நிலையைக் குழந்தைகள்
அடையும்போது, அவர்களின் செயல்பாடு, எண்ணங்கள் மற்றும் பேச்சுகளில் பல
மாறுதல்கள் தோன்றும். இதனைக் கண்டு பெற்றோர்கள் அதிகம் குழப்பமடைவர்
மற்றும் பயம் கொள்வர். காரணம், அவர்களின் குழந்தையிடம் ஏற்பட்டிருக்கும்
ஒருவிதமான இனம்புரியாத மாற்றங்கள்தான். தங்களின் குழந்தை ஏதோ, தவறான
வழியில் செல்கிறதோ என்ற எண்ணமே அதற்கு காரணம். ஏனெனில், அதுவரை அவர்கள்,
தாங்கள் பெற்றவர்களை, குழந்தைகளாகவே பாவித்து பழகியிருப்பார்கள்.
எனவே, அத்தகைய நிலையில் குழந்தைகளிடம் தென்படும் வித்தியாச குணநலன்கள்
மற்றும் அவர்களிடம், பெற்றோர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது
பற்றிய ஆலோசனையை இக்கட்டுரை தருகிறது.
ட்வீன்(Tween) பருவ சுபாவங்கள்
* சில சமயங்களில் உங்கள் பிள்ளைகள் டீன் பருவத்தினரைப் போன்று நடந்துகொள்வார்கள்.
* குடும்பத்தினருடன் இருப்பதைவிட, அதிகநேரம் நண்பர்களுடன் இருப்பதையே விரும்புவார்கள்.
* புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்புவார்கள் மற்றும் சிலவிதமான ரிஸ்க் எடுக்கவும் விரும்புவார்கள்.
* குடும்பத்தில் தொன்றுதொட்டு வரும் சில பழக்கவழக்கங்கள் மற்றும் சம்பிரதாயங்களைப் பற்றி கேள்வியெழுப்புவார்கள்.
* அவர்களுக்கான ஒரு தனி முக்கியத்துவத்தை எதிர்பார்ப்பார்கள்.
* அடிக்கடி சில விஷயங்களைப் பற்றி வாதம் செய்வார்கள் மற்றும் பேரம் பேசுவார்கள்.
* அதேசமயம், பொம்மைகள் மற்றும் இதர விளையாட்டு சாமான்களை பயன்படுத்தி, விளையாடவும் செய்வார்கள்.
பெற்றோர்களுக்கான ஆலோசனைகள்
ட்வீன் பருவ குழந்தைகளை கையாள்வதற்கு பெற்றோர்களுக்கென சில பக்குவங்கள் வேண்டும். அதுதொடர்பான சில ஆலோசனைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.
நண்பர்களுடன் மகிழ்தல்
குடும்பத்தைவிட, நண்பர்களுடன், அதிகநேரம் செலவிட விரும்பும்
இப்பருவத்தில், அதற்கு தடைபோடுவது தவறு. அதேசமயம், நண்பர்களுடன் சென்று
விளையாடு என்று நம் கண்ணுக்கு அப்பால் அவர்களை அனுப்பி, ரிஸ்க்
எடுப்பதைவிட, உங்கள் குழந்தையின் நண்பர்களை உங்கள் வீட்டுக்கே
வரவழைக்கலாம்.
அங்கேயே அவர்கள் விளையாட ஏற்பாடு செய்து, அவர்களுக்கு திண்பண்டங்களை
அளித்து, அதன்மூலம், உங்களின் கண் பார்வையிலேயே அவர்களை வைத்துக்கொள்ளலாம்.
இதன்மூலம், வெளியில் அவர்களுக்கு நேரும் ஆபத்துக்களில் இருந்து
பாதுகாக்கலாம்.
தனி அறை ஒதுக்குதல்
பெற்றோர் அரவணைப்பையே பெரிதும் விரும்பும் குழந்தைப் பருவத்திலிருந்து
விடுபட்டு, சிறிது தனிமையை விரும்பும் நேரமிது. எனவே, அவர்களுக்கென்று ஒரு
தனி அறையை ஒதுக்குவது சிறந்தது. அப்படி ஒதுக்கும்போது, அந்த அறையை சுத்தம்
செய்வது மற்றும் பராமரித்தல் உள்ளிட்ட வேலைகளை, அவர்கள் வசமே ஒப்படைக்க
வேண்டும். அப்போது, தானாகவே அவர்களுக்கு ஒரு பொறுப்புணர்வு உண்டாகும்.
தனக்கென ஒரு தனியறை ஒதுக்கப்படுகையில், உங்களின் குழந்தையானது, வீட்டில்
தனக்கு ஒரு தனி முக்கியத்துவம் கிடைக்கிறது என்று உணரும் மற்றும் அதன்
நம்பிக்கையும் அதிகரிக்கும். அதேசமயம், அறைக்குள் என்ன நடக்கிறது என்பதை
நீங்கள் தேவையானபோது கண்காணிப்பதும் கட்டாயம். ஏனெனில், இன்றைய நவீன
தொழில்நுட்ப யுகத்தில் பல ஆபத்துக்கள் நம் வீட்டிற்குள் எளிதாக நுழையும்.
தனி அறை ஒதுக்க முடியாத அளவிற்கு சிறிய வீடாக இருந்தால், குறைந்தபட்சம்
உங்கள் குழந்தைக்கு ஒரு புத்தக அலமாரியாவது ஒதுக்கலாம். இதன்மூலம், அது
தனக்கான தனி முக்கியத்துவ உணர்வைப் பெறும் மற்றும் அந்த அலமாரியையும் அழகாக
பராமரிக்கும்.
அடம் பிடித்தல்
இந்த பருவத்தில் குழந்தைகள் அடம் பிடிப்பதும் அதிகமாக இருக்கும். ஆனால்,
நாம் அதற்காக உடனே கோபப்பட்டு, அடிப்பதோ அல்லது கடுமையாக திட்டுவதோ
கூடாது. அவர்களை, பொறுமையாக பேசி, காரணங்களை விளக்கிக் கூறித்தான் வழிக்கு
கொண்டுவர வேண்டும்.
தவறான விஷயங்களால் ஏற்படும் பின்விளைவுகளை பொறுமையாக எடுத்துக்கூறி,
அதன்மூலம், அதை நோக்கிய அவர்களின் பிடிவாதத்தை தடுக்க வேண்டும். அதேசமயம்,
நீங்கள் சொல்ல ஆரம்பித்தவுடனேயே அவர்கள் பொறுமையாக அமர்ந்து கேட்டு
விடுவார்கள் என்று எதிர்பார்த்தல் கூடாது. மாறாக, சிறிதுநேரம் பொறுமையாக
இருந்து, அவர்கள் அமைதியாகும் வரை காத்திருக்க வேண்டும்.
மேலும், சில நேரங்களில், இதுபோன்று அடம் பிடிக்கையில், அவர்களின்
சந்தோஷத்திற்கென்று நிர்ணயிக்கப்பட்டுள்ள சில சலுகைகள் ரத்து செய்யப்படும்
என்று எச்சரிக்கையும் விடுக்கலாம். உதாரணமாக, வெளியிடம் ஒன்றிற்கு
செல்லுதல் அல்லது சினிமாவிற்கு செல்லுதல் போன்று, ஏற்கனவே பேசிவைக்கப்பட்ட
சலுகைகளை ரத்துசெய்வதாக கூறி எச்சரிக்கலாம்.
எதிர் பாலின கவர்ச்சி
குழந்தைகளுக்கு, எதிர் பாலினத்தின் மீதான கவர்ச்சி, இந்த வயதில்
தொடங்குகிறது எனலாம். அதுவும், இன்றைய தொழில்நுட்ப யுகத்தில், முறையான
வழிகாட்டல் இல்லையென்றால், குழந்தைகள் வழிதவறி செல்லும் வாய்ப்புகள் மிக
அதிகம்.
தேவையான அளவு பாலியல் விழிப்புணர்வு மற்றும் குடும்ப மதிப்பீடுகள்
பற்றிய கல்வியை உங்கள் குழந்தைக்கு, இந்த வயதில் கட்டாயம் கொடுக்க
வேண்டும். மேலும், இந்த வயதில், அவர்கள் வெளியாட்கள் அல்லது உறவினர்களின்
பாலியல் அத்துமீறல்களுக்கும் ஆளாகும் வாய்ப்புகள் உண்டு. அதுமாதிரி
ஆபத்துக்களை அவர்கள் சந்திக்க நேர்ந்தால், அதைப்பற்றி பெற்றோரிடம் சொல்ல
அவர்கள் நினைப்பார்கள்.
எனவே, அவர்கள் உங்களிடம் ஏதாவது தயங்கி தயங்கி பேச வந்தால், உங்கள் வேலை
பளுவை காரணம் காட்டி, அவர்களை புறக்கணிக்காமல், அவர்கள் சொல்வதை பொறுமையாக
கேட்க வேண்டும். அவர்களின் தயக்கத்தை அகற்ற வேண்டும். இதன்மூலம்,
அவர்களுக்கு ஏதேனும் அநீதி ஏற்பட்டிருந்தால், அதை முளையிலேயே கிள்ளி எறிய
முடியும்.
குழந்தைகள்தான், ஆனால் இல்லை...
உங்கள் ட்வீன் பருவ குழந்தை, ஒப்பீட்டு அளவில் குழந்தைதான் என்றாலும்,
குழந்தைப் போன்று அவர்களை நடத்தினால், அவர்களுக்கு கோபம் வரும். அவர்கள்,
தங்களுக்கான ஒரு செயல் சுதந்திரம் மற்றும் தனிமையை எதிர்பார்ப்பார்கள்.
அதேசமயம், திடீரென்று குழந்தை மனோநிலைக்கும் மாறுவார்கள்.
எனவே, எதற்கும் நீங்கள் தயாராக இருந்து, அவர்களுக்கு உறுதுணையாக இருக்க
வேண்டும். இப்போது தொடங்கி, 20 வயதுவரை, உங்கள் குழந்தையை சரியாக
கண்காணித்து வளர்த்துவிட்டால் போதும். பின்னர், ஆயுள் முழுவதும் கவலைப்படத்
தேவையில்லை.
No comments:
Post a Comment