சூரிய ஒளிப்பிழம்பின் ஒரு பகுதியான புற ஊதாக் கதிர்வீச்சைத் தடுத்து
நிறுத்தி, புவியைக் காத்து வரும் வளையமே ஓசோன் படலம். கடல்
மட்டத்திலிருந்து 20 கி.மீ., முதல் 50 கி.மீ., வரை உள்ள "அடுக்கு வாயு
மண்டலத்தில்" தான் ஓசோன் உள்ளது.
1840ல் ஜெர்மன்
அறிஞர் பிரடரிக் ஸ்கான் பெயின், ஓசோனைக் கண்டறிந்தார். ஓசோனின் அளவையும்,
பரப்பையும் செயற்கைக்கோள் மூலமாகத் துல்லியமாக அறியலாம்.
பூமியைக் காக்கும் ஓசோனின் அளவு படிப்படியாகக் குறைந்து
வருவதை அறிஞர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து ஓசோனைக் காக்க 1987, செப்.,16ல்
கனடாவில் உள்ள மான்ட்ரீல் நகரில் "மான்ட்ரியல் ஒப்பந்தம்" எனும் உடன்பாடு
ஏற்பட்டது. இதன்படி, ஓசோன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்
விதமாக, செப்.,16ல் "சர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினம்"
கடைப்பிடிக்கப்படுகிறது.
ஓசோன் படலம் பாதிக்கப்படுவதற்கு, நாம் பயன்படுத்தும்
வேதிப்பொருட்கள் தான் முக்கியக் காரணம். குறிப்பாக குளோரோ புளோரோ கார்பன்
(சி.எப்.சி.,) எனும் குளிரூட்டிப் பொருளே ஓசோனைச் சிதைத்து, அதன் அளவைக்
குறைப்பதில் முதல் இடத்தில் உள்ளது. ஏ.சி., "நெயில் பாலீஷ்", "லிப்ஸ்டிக்",
தீயணைப்புக் கருவி, "பாடி ஸ்பிரே" போன்றவற்றில் இக்கார்பன்,
குளிரூட்டியாகப் பயன்படுத்தப்படுகிறது.
இந்த சி.எப்.சி., ஓசோன் பகுதியை அடைந்ததும், புற ஊதாக்
கதிர்களால் தாக்கப்பட்டு, குளோரினைத் தோற்றுவிக்கிறது. இந்தக் குளோரினே,
ஓசோன் மூலக்கூறுகளை அழிக்கிறது. ஒரு சி.எப்.சி., மூலக்கூறு, ஆயிரம் ஓசோன்
மூலக்கூறுகளைச் சிதைக்கக் கூடியது. அதனால் இதை "ஓசோன் கொல்லி" என்கின்றனர்.
பாதிப்புகள்
ஓசோன் அளவு குறைந்தால் பூமியின் வெப்பம் உயரும். துருவப்
பகுதிகளில் பனி உருகி, கடலின் நீர் மட்டம் உயரும். தாழ்வான பகுதிகள் நீரில்
மூழ்கும். ஓசோன் படலத்தில் ஏற்படும் துளைகள் வழியே பூமியை அடையும் புற
ஊதாக்கதிர்கள், காலநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
இக்கதிர்வீச்சு கண் நோய், பார்வை இழப்பு, நோய் எதிர்ப்பு
சக்தியைக் குறைத்தல், தோல் புற்று நோய் போன்றவற்றை ஏற்படுத்தும்.
இக்கதிர்கள், கடல் உணவுச் சங்கிலியில் முதலிடத்தில் உள்ள பிளாங்டான் எனும்
மிதவை உயிரினங்களை எளிதில் கொல்லும். இவை அழிவதால், மற்ற கடல் உயிரிகள்
இல்லாமல் போகும் அபாயம் உருவாகும்.
No comments:
Post a Comment