ஈரோடு மாவட்டத்தில், பர்கூர், கடம்பூர் மலைப்பகுதி மக்களுக்கு,
சான்றிதழ் கிடைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மலைவாழ்
மக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், பவானி வட்டத்தில், பர்கூர் மலை, கடம்பூர் மலை, தாளவாடி
உள்ளிட்ட மலைப்பகுதிகளில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள்
வசிக்கின்றனர். இம்மலைப் பகுதிகளில், சோளகா, ஊராளி, மலையாளி இனத்தவர்கள்,
அதிகம் பேர் உள்ளனர்.
அரசின் நேரடி பார்வை இல்லாததாலும், வனத் துறையினரின் கண்காணிப்பு
இல்லாததாலும், மலைவாழ் மக்கள், பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
கடந்த, 20 ஆண்டுகளாக மலைவாழ் மாணவர்களுக்கு, ஜாதி சான்றிதழ்
வழங்கப்படாததால், 4,000 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, மலைவாழ் பழங்குடி
மக்கள் முன்னேற்ற சங்கத்தினர், குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, மலைவாழ் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் செயலர்,
ராமலிங்கம் கூறியதாவது: பர்கூர் மலையில், 33 கிராமங்கள், கடம்பூர் மலையில்,
20க்கும் மேற்பட்ட கிராமங்கள், தாளவாடி மலைப்பகுதி என, மூன்று மலைகளிலும்,
இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடி மக்கள் வசிக்கின்றனர்.
இங்கு, 5,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக, மலைவாழ் பழங்குடி இன மக்களுக்கு, ஜாதி
சான்றிதழ் கேட்டு, பலமுறை விண்ணப்பித்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும்
எடுக்கவில்லை. கடந்த, 20 ஆண்டுகளில், 4,000 மாணவ, மாணவியர் மேற்படிப்பை
தொடர முடியாமல், பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டனர்.
கடந்த, 20 ஆண்டுகளில், எங்கள் மலைப்பகுதியில் இருந்து ஒருவர் கூட,
அரசுப் பணிக்கு செல்லவில்லை. இதுகுறித்து, பல முறை அரசுக்கு கோரிக்கை
வைத்ததன் பயனாக, ஊட்டியில் இயங்கும் மலைவாழ் பழங்குடி ஆய்வு மையத்துக்கு,
இப்பிரச்னை குறித்து விசாரிக்க, மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டன.
அரசு நியமித்த அதிகாரியும், ஊட்டி ஆய்வு மைய இயக்குனர் ஜக்கா
பார்த்தசாரதியும், மலைவாழ் மக்களை பார்க்காமல், விசாரிக்காமலேயே, எங்கள்
மக்களை, மலையாள கவுண்டர், காரளா கவுண்டர் என, அரசுக்கு பரிந்துரைத்தனர்.
இதை எதிர்த்து, மலைவாழ் அமைச்சகம், இந்திய முதன்மை பதிவாளர் ஆகியோருக்கு,
மலைவாழ் சங்கத்தினர் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டதால், மறு கருத்துரு
கேட்டு, தமிழக அரசிடம், இந்திய முதன்மை பதிவாளர் கடிதம் அனுப்பினார்.
ஆனால், இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள்
மக்களுக்கு, எஸ்.டி., சான்றிதழ் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment