"நாட்டில், அதிகமானோர் கல்வியறிவு பெற்றுள்ள மாநிலம் என்ற பெருமையைப்
பெற்றிருந்த கேரளாவைப் பின்னுக்குத் தள்ளி, திரிபுரா மாநிலம், முதல் இடத்தை
அடைந்து உள்ளது" என அம்மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முதல்வர், மாணிக்
சர்க்கார் கூறியுள்ளார்.
பத்தாண்டுகளுக்கு ஒருமுறை
நாட்டின் மக்கள்தொகை கணக்கிடப்படுகிறது. கடைசியாக, 2011ம் ஆண்டில்
கணக்கிடப்பட்ட மக்கள்தொகை புள்ளிவிவரங்களின் படி, கல்வியறிவில், கேரளா
முதலிடத்தைப் பிடித்திருந்தது. அம்மாநில மக்களில், 93.91 சதவீதம் பேர்
படித்தவர்களாக இருந்தனர். இப்போது, 94.65 சதவீத கல்வியறிவைப் பெற்று,
திரிபுரா முதலிடத்தைப் பிடித்துள்ளதாக, அம்மாநில முதல்வர், மாணிக்
சர்க்கார் கூறியுள்ளார்.
சர்வதேச கல்வியறிவு நாளை முன்னிட்டு, தலைநகர் அகர்தலாவில் நடைபெற்ற
நிகழ்ச்சியில், முதல்வர் சர்க்கார், இந்த தகவலை வெளியிட்டார். அவர்
கூறியதாவது: கடந்த, 2001ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்
படி, நாட்டில், 12வது இடத்தை பிடித்திருந்த திரிபுரா, 2011ம் ஆண்டில்,
நான்காவது இடத்தைப் பிடித்திருந்தது. அதற்குப் பிறகு, இந்திய புள்ளியல்
நிறுவன அதிகாரிகள் துணையுடன், மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட
மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, முதலிடத்தை நாம் அடைந்து உள்ளோம்.
திரிபுராவில், 94.65 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளதை
அடுத்து, நாட்டின் முதலிடத்தை நாம் அடைந்து உள்ளோம். இதற்காக பாடுபட்ட,
கிராம பஞ்சாயத்து, சமூக சேவை அமைப்புகள், மாநில அரசின் கல்வியறிவுத் திட்ட
அதிகாரிகளைப் பாராட்ட வேண்டும். இவ்வாறு, முதல்வர் சர்க்கார் கூறினார்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுரா, நாட்டின் அதிக கல்வியறிவு
மாநிலம் என்ற பெருமையைப் பெற்றுள்ள நிலையில், வட கிழக்கு மாநிலங்களில்
மற்றொன்றான அருணாச்சல பிரதேசம், கல்வியறிவில், நாட்டின் கடைசிக்கு முந்தைய
இடத்தைப் பிடித்துள்ளது. கடைசி இடத்தில் உள்ள பீகாரில், 63.82 சதவீதம் பேர்
கல்வியறிவு பெற்றுள்ளனர்; அருணாச்சல பிரதேசத்தில், 66.95 சதவீத கல்வியறிவு
உள்ளது. தமிழகத்தில், 80.1 சதவீத கல்வியறிவு உள்ளது.
No comments:
Post a Comment