தமிழகம் முழுவதும், இம்மாதம், 15ம் தேதி முதல், பத்தாம் வகுப்பு தனி
தேர்வு துவங்க உள்ள நிலையில், எட்டாம் வகுப்பு முடித்துவிட்டு, நேரடியாக,
10ம் வகுப்பு தனி தேர்வுக்கு விண்ணப்பித்த, ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியரின்
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அறிவியல் செய்முறை பயிற்சியில்
பங்கேற்காததால், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக, தேர்வுத்துறை
வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜூன், ஜூலையில் நடந்த, உடனடித் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்
மற்றும் நேரடியாக, 10ம் வகுப்பு தேர்வெழுத விரும்பிய மாணவ, மாணவியர்,
இம்மாதம், 15ம் தேதி முதல் துவங்கும் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.
இம்மாதம், 26ம் தேதி வரை நடக்கும் தேர்வில், 72 ஆயிரம் பேர்
பங்கேற்கின்றனர்; 150 மையங்களில், தேர்வுகள் நடக்கின்றன.
செய்முறை தேர்வு அமல்:
கடந்த ஆண்டு வரை, மெட்ரிக்., - ஆங்கிலோ இந்தியன் மாணவ, மாணவியருக்கு மட்டுமே, செய்முறைத் தேர்வு, அமலில் இருந்தது. சமச்சீர் கல்வி அமலுக்கு வந்துவிட்டதால், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும், 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, அறிவியல் பாடத்தில், செய்முறைத் தேர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. எழுத்து தேர்வுக்கு, 75 மதிப்பெண்கள், செய்முறை தேர்வுக்கு, 25 மதிப்பெண்கள் என, பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நேரடியாக தனி தேர்வு எழுதும் மாணவ, மாணவியரும், அறிவியல் பாடத்தில் செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும். இதற்காக, தேர்வுத்துறை சார்பில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, பதிவு செய்து கொள்ளும் தேர்வர்களுக்கு, செய்முறை தேர்வு குறித்த பயிற்சியும் அளிக்கப்படுகிறது. எட்டாம் வகுப்பு முடித்து, நேரடியாக, 10ம் வகுப்பு தேர்வை எழுத விரும்பும் தேர்வர்களுக்கு, தற்போது, செய்முறைத் தேர்வு பயிற்சி வகுப்பில் பங்கேற்பதற்கு, விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதை அறியாமல், தேர்வில் பங்கேற்பதற்கு, ஆயிரக்கணக்கான நேரடி தனி தேர்வர் விண்ணப்பித்துள்ளனர்.
நிராகரிப்பு:
தர்மபுரி மாவட்டத்தில், தமிழ் பாடத்துக்கு, 764 பேர், ஆங்கிலம், 1,363, கணிதம், 533, அறிவியல், 339, சமூக அறிவியல், 757 பேரும் விண்ணப்பித்தனர். தனி தேர்வுக்கு, நேரடியாக விண்ணப்பித்திருந்த பலர், நேற்று, தர்மபுரி, டி.இ.ஓ., அலுவலகத்திற்கு, "ஹால் டிக்கெட்' பெற வந்தனர். எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் தோல்வி அடைந்து, மதிப்பெண் சான்றிதழ் நகலுடன், "ஆன்-லைன்' வழியாக விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பம் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, நேரடியாக, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதனால், மாணவ, மாணவியர், ஏமாற்றத்துடன், திரும்பிச் சென்றனர். இதேபோல், அனைத்து மாவட்டங்களிலும், கொத்து, கொத்தாக, பல ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இரு நாளில், தேர்வு துவங்க உள்ள நிலையில், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதால், மாணவ, மாணவியர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விளக்கம்:
விண்ணப்பங்கள் நிராகரிப்பு குறித்து, தேர்வுத்துறை இயக்குனரக வட்டாரங்கள், நேற்று மாலை கூறியதாவது: நேரடி தனி தேர்வர், மார்ச் மாதம் நடக்கும் தேர்வில் மட்டுமே பங்கேற்க முடியும். அனைத்து வகை, 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கும், அறிவியலில் செய்முறைத் தேர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நேரடி தனி தேர்வர், ஆறு மாதங்களுக்கு முன், செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்க பதிவு செய்ய வேண்டும். இந்த வகை தேர்வர், மார்ச்சில் நடக்கும் தேர்வுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஜூன், ஜூலையில் நடக்கும் உடனடித் தேர்வு, அக்டோபரில் நடக்கும் தனித் தேர்வில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இது தெரியாமல், செய்முறை பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்யாத நேரடி தனி தேர்வர், விண்ணப்பித்துள்ளனர். இப்படிப்பட்ட மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பதைத் தவிர, வேறு வழியில்லை. எத்தனை ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்ற விவரம், தற்போது தெரியவில்லை. இவ்வாறு தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். நான் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதலாமா.
ReplyDeleteநான் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதவில்லை
ReplyDelete