தனியார் பள்ளி மாணவர்களுக்கு, தனி பேருந்துகளை
குறிப்பிட்ட வழித் தடங்களில் இயக்க உத்தரவிட வேண்டும் என, தாக்கலான
மனுவிற்கு பதிலளிக்க, அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை உயர் நீதிமன்றக்
கிளை உத்தரவிட்டது.
சிவகாசி தென்மண்டல குழந்தை
உரிமைகள் பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் அருணோதய எர்ஸ்கின் தாக்கல் செய்த
மனு: சென்னையில், பள்ளி வேனில் சென்ற, 6 வயது குழந்தை, அதே வேன் ஓட்டை
வழியாக விழுந்து பலியானது. இதைத் தொடர்ந்து, பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு
குறித்து, அரசு பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டம், (கல்வி நிறுவன வாகனங்கள் ஒழுங்குமுறைச்
சட்ட சிறப்பு விதிகள் 2012) அரசு கொண்டு வர உள்ளது. அரசு அல்லது அரசு உதவி
பெறும் பள்ளிகளில் தான், 67 சதவீத மாணவர்கள் படிக்கின்றனர். தமிழக அரசு,
27.2 லட்சம் மாணவர்களுக்கு, இலவச பஸ் பாஸ் வழங்கியுள்ளது. அவர்கள் தினமும்
பல இடையூறுகளை சந்தித்து, அரசு பஸ்களில் பயணிக்கின்றனர்.
அரசு பஸ் ஓட்டுனர்கள் உரிய இடங்களில் நிறுத்துவதில்லை. மாணவர்கள் ஓடிச்
சென்று, பேறுந்துகளில் ஏற வேண்டியுள்ளது. பேருந்துகளில் கம்பிகள் நீட்டிக்
கொண்டும், இருக்கைகள் கிழிந்தும் உள்ளன. தனியார் பள்ளி வாகனங்களுக்கு,
கடும் விதிமுறைகளை அரசு வகுக்கிறது. ஆனால், அரசு பஸ்களில் பாதுகாப்பு
அம்சங்கள் குறித்து கண்டுகொள்வதில்லை.
மாணவர்களுக்கு, தனி பேருந்துகளை குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்க
வேண்டும். அனுபவம் வாய்ந்த டிரைவர்கள், கண்டக்டர்களை நியமிக்க வேண்டும்;
அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க வேண்டும். பாதுகாப்பான பயணத்திற்கு
உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு மனு அனுப்பினேன். மனு
மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதிகள் பி.பி.எஸ்.ஜனார்த்தன ராஜா, எம்.துரைசாமி கொண்ட அமர்வு
முன்னிலையில் மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் ஆர்.நாராயணன்
ஆஜரானார். தலைமைச் செயலர், போக்குவரத்துத் துறை செயலர், பள்ளிக் கல்வித்
துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment