"துப்புரவு தொழிலாளர்களை விட, ஆசிரியர்களுக்கு குறைவான சம்பளம்
வழங்கப்படுகிறது; நியாயமான சம்பளம் வழங்க முடியாவிட்டால், பள்ளிகளை
மூடிவிடலாம்" என, கேரள அரசுக்கு, உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் உள்ள அரசு பள்ளிகளில்,
மழலையர் பள்ளிகளை (ப்ரீ பிரைமரி), பெற்றோர் - ஆசிரியர் கழகம் நடத்தி
வருகிறது. இங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, தொகுப்பூதியமாக, குறைந்த
சம்பளம் வழங்கப்படுகிறது; இதுதொடர்பாக, கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், "மழலையர் பள்ளிகளில் பணியாற்றும்
ஆசிரியர்களுக்கு, மாதம், 5,000 ரூபாயும், அங்கு குழந்தைகளை பராமரிக்கும்
ஆயாக்களுக்கு, 3,500 ரூபாயும் சம்பளம் வழங்க வேண்டும்&' என, கேரள
அரசுக்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, கேரள அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு
செய்யப்பட்டது. நீதிபதிகள், சவுகான் மற்றும் கேகார் அடங்கிய அமர்வு மனுவை
விசாரித்தது. இறுதியில், கேரள அரசின் மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதிகள்
பிறப்பித்த உத்தரவு:
கேரளாவில், மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கு, துப்புரவு தொழிலாளர்களை விட,
குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது. ஆசிரியர்கள் மற்றும் ஆயாக்களுக்கு,
வழங்க வேண்டிய சம்பளம் குறித்து, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
சரியானதே.
மழலையர் பள்ளிகளை, பெற்றோர் - ஆசிரியர் கழகங்கள் தான் நடத்தி வருகின்றன.
இருந்தாலும், ஆசிரியர்கள் மற்றும் ஆயாக்களுக்கான தொகுப்பூதியம், அரசு
சார்பில் வழங்கப்படுகிறது. அதேபோல், மாணவ, மாணவியருக்கு அரசு சார்பில்,
இலவசமாக உணவும் வழங்கப்படுகிறது.
ஆசிரியர்களுக்கு நியாயமான சம்பளத்தை, அரசால் வழங்க முடியாவிட்டால்,
மழலையர் பள்ளிகளை மூடி விடலாம். இந்த பிரச்னையை, கேரள மாநில அரசு
நினைத்திருந்தால், 10 நிமிடத்தில் பேசி முடித்திருக்கலாம்; ஆனால், இதற்காக,
டில்லி வரை வந்துள்ளனர்.
சம்பள உயர்வை அமல்படுத்த, கேரள அரசுக்கு கால அவகாசம் தேவை எனில்,
அதுகுறித்து உய்ர் நீதிமன்றத்தில் முறையிடலாம். இவ்வாறு, நீதிபதிகள்
உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment