பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் (தடை, தடுப்பு,
தீர்வு)வன்கொடுமை சட்டத்தின் கீழ் கல்வி நிறுவனம், அரசு, தனியார்
நிறுவனங்களுக்குள் "புகார் கமிட்டி" அமைக்க வேண்டும். பெரும்பாலான
நிறுவனங்களில் இக்கமிட்டி அமைக்கப்படவில்லை.
இதுகுறித்து, மதுரை சோகோ அறக்கட்டளை துணைத் தலைவர் செல்வகோமதி
கூறியதாவது: கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில்
பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதற்காக
"இன்டர்நெல் கம்ப்ளைன்ட் கமிட்டி" அமைக்க வேண்டும். இக்கமிட்டியில், பெண்
தலைமையில், 50 சதவீதத்திற்கு மேல், பெண்கள் உறுப்பினர்களாக இருக்க
வேண்டும்.
வெளிநபர்கள், உறுப்பினர்களாக இருக்க வேண்டும். உரிமையியல் நடைமுறைச்
சட்டத்திற்கு உரிய அதிகாரம், இக்கமிட்டிக்கு உண்டு. ஒரு பெண் பாலியல்
வன்முறையால் பாதிக்கப்பட்டால், வளாகத்தில் உள்ள கேமரா பொருத்தப்பட்ட
தனியறையில் விசாரிக்க வேண்டும். பாதிக்கப்பட்டது உண்மை என்று தெரிந்தால்,
அப்பெண்ணின் விருப்பத்தின் பெயரில் தவறு செய்தவரை பணியிட மாற்றம்
செய்யலாம், நஷ்டஈடு தரலாம். மறுவாழ்வுக்கு உதவி செய்யலாம்.
ஒவ்வொரு நிறுவனத்திலும் கட்டாயமாக, இக்கமிட்டியை அமைத்து, சர்வீஸ்
விதிகளில், "பாலியல் வன்கொடுமை தடை செய்யப்பட்டுள்ளது" என வெளியிட
வேண்டும். சித்தாள், வீட்டு வேலை செய்பவர் போன்ற, முறைசாரா அமைப்பில் வேலை
செய்யும் பெண்களைப் பாதுகாக்க, கலெக்டர் தலைமையில், "உள்ளூர் புகார்
கமிட்டி" அமைக்க வேண்டும்.
மதுரையில் சில கல்லுாரிகளில் மட்டுமே இக்கமிட்டி உள்ளது. நிறுவனங்களைப்
பற்றிய தகவல்கள் இல்லை. கமிட்டி அமைப்பது குறித்து, ஆலோசனை பெற 98434
60061 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
இதுபற்றி ஏக்தா அமைப்பு ஆய்வாளர் பவளம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள
2,140 கல்லுாரிகள், 55 பல்கலைகழகங்கள் உள்ளன. பல்கலை மானியக் குழுவின்
சர்வேயில், கமிட்டி குறித்து 83 நிறுவனங்கள் மட்டுமே பதில்கள்
அனுப்பியிருந்தன. அதில் 50 சதவீதம் மட்டுமே கமிட்டி அமைத்துள்ளன. 50 சதவீத
கிராமப்புற, தனியார் நிறுவனங்கள் மோசமாக உள்ளன. புகார்களை பதிவு
செய்வதில்லை என்றார்.
No comments:
Post a Comment