சீனர்கள் உள்ளிட்ட பல நாட்டவர்கள் உண்ணும்போது கைகளைப்
பயன்படுத்துவதில்லை. வேறு உபகரணங்களைக் கொண்டே வாயில் உணவை எடுத்து
வைக்கின்றனர். ஆனால் அரிசி மற்றும் அதுசார்ந்த உணவுப் பொருட்களை பிரதானமாக
உண்ணும் நாம் கையால் உண்ணும் வழக்கத்தையே காலங்காலமாக மேற்கொள்கிறோம்.
உணவு உண்ணுதல் என்பது மனிதன்
உயிர் வாழ்வதற்கான ஒரு மிக முக்கியமான வாழ்க்கை நடவடிக்கை. அதேசமயம், அது
ஒரு சமூக நிலையில் ஏற்கப்படக்கூடிய முறைகளை உள்ளடக்கிய ஒரு நடவடிக்கையாக
இருக்க வேண்டியதும் அவசியமாகிறது.
பல நபர்கள், எத்தனை வயதாகியும், சமூகத்தால் ஏற்கப்படக்கூடிய முறையில்,
உணவு உண்ணும் வழக்கத்தை பின்பற்றக்கூடிய நிலையில் இல்லாதவர்களாக
இருக்கிறார்கள். அவர்கள் உண்ணும் முறை பார்க்கும் பலரை முகம் சுளிக்க
வைக்கிறது.
எனவே, இளமையில் கல் என்ற முதுமொழிக்கு ஏற்ப, குழந்தைப் பருவத்திலேயே,
நாகரீகமான முறையில் உணவு உண்ணுதல் எப்படி என்பதை நம் குழந்தைகளுக்கு
கற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது.
குழந்தைகள் உண்ணும் முறையை கற்றுக் கொடுத்தல்
* சாப்பிடும்போது விரல்களை மட்டுமே பயன்படுத்தி உண்ணுமாறு கூற வேண்டும்.
சாப்பிடும்போதும், பிசையும்போதும் உள்ளங்கை வரை உணவு செல்லக்கூடாது.
* மேலும், உணவை எடுத்து வாயில் வைக்கும்போது, சரியான அளவில் உணவை எடுக்க
வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும். ஏனெனில், தேவைக்கும் அதிகமான அளவில்
உணவை எடுத்து வாயில் வைக்கும்போது, இடம் போதாமல் உணவு சிந்தும் நிலை
ஏற்படுகிறது. இதைப் பிறர் பார்ப்பதற்கு நன்றாக இருக்காது.
* உணவை வாயில் வைத்தப் பின்னர், அதை மூடிய நிலையில் மெல்லுமாறு
குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். அப்போதுதான் சவக் சவக் என்ற
அநாகரீகமான சத்தம் வராது.
* உண்ணும்போது, சற்று குனிந்து செயல்பட வேண்டிய அவசியத்தை உணர்த்த
வேண்டும். ஏனெனில், அப்போதுதான் தட்டிற்கும், வாய்க்கும் இடையேயான இடைவெளி
குறைந்து, உணவு தேவையற்ற இடங்களில் சிந்துவதை தவிர்க்க முடியும்.
* டைனிங் டேபிளில் அமர்ந்து உண்ணும்போது, தட்டிற்கு கீழே விரிப்பை
பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் உண்ணும்போது, உங்களின் குழந்தை தேவையற்ற
இடங்களில் தட்டை நகர்த்தாமல், முறையான இடத்தில் தட்டை வைத்து உண்ணப்
பழகும்.
* தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டோ அல்லது எதையாவது படித்துக்கொண்டோ
உண்பதற்கு, எந்த சூழலிலும் உங்களின் குழந்தையை அனுமதிக்க வேண்டாம்.
* குழந்தைகள் சாப்பிடும்போது அவசரப்படுத்தக்கூடாது. இது ஒரு தவறான பழக்கம்.
* டைனிங் டேபிளில் அமர்ந்து உண்ணும்போது, இரண்டு கால்களையும் கீழே
தொங்கவிட்டு, ஒரு கையை டேபிளிலேயே தட்டிற்கு அருகே வைத்துக்கொண்டு, இன்னொரு
கையைப் பயன்படுத்தி உண்பதற்கும், கீழே அமர்ந்து உண்ணும்போது, இரண்டு
கால்களையும் மடக்கி வைத்துக்கொண்டு அமர்ந்து, ஒரு கையை கால்களின் மீது
மடக்கி வைத்துக்கொண்டு, இன்னொரு கையால் சற்று குனிந்த நிலையில் இருந்து
உண்பதற்கும் சொல்லித்தர வேண்டும்.
* சிறு குழந்தைகள் சாப்பிடும்போது, அவர்களின் கைகள் மற்றும் கண்களுக்கு
இடையிலான ஒருங்கிணைப்பு வலுவடைகிறது. மேலும், அதேசமயத்தில், அவர்கள்
சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படும் வகையிலான உண்ணும் பழக்கத்தைக் கற்றுக்
கொள்கின்றனர்.
* எதையும் உண்ணும் முன்னதாக, கைகளைக் கழுவும் பழக்கத்தை உங்களின்
குழந்தை கட்டாயம் பின்பற்றுவதை உறுதிசெய்ய வேண்டும். இதுதான் அனைத்திற்கும்
அடிப்படை.
It's very useful. I already follow this in my class
ReplyDelete