கடலூர் மாவட்டத்தில் கற்றல் திறன் குறைவாக உள்ள 9ம் வகுப்பு அரசு
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் திறனாய்வுத்
தேர்வு நடக்கிறது.
அரசு பள்ளிகளில்
பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித் திறனை மேம்படுத்த மாநில அரசு பல்வேறு
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும்
உள்ள அரசு பள்ளிகளில் 9ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித் திறனை
அந்தந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
அதன்படி, கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர் மற்றும்
விருத்தாசலம் என, இரண்டு கல்வி மாவட்டங்களில் 227 அரசு உயர்நிலை,
மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வு நடந்தது. ஆய்வின் போது தமிழ், கணக்கு,
ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களில் 6,954 மாணவ, மாணவிகள் உச்சரிப்புத் திறன்,
வாசிப்புத் திறன், எழுதும் திறன் ஆகியவற்றில் தேர்ச்சி குறைவாக இருந்தது
தெரியவந்தது.
இதையடுத்து தேர்ச்சி குறைந்த மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை
மேம்படுத்தும் வகையில் அனைவருக்கும் கல்வி இடைநிலைக் கல்வித் திட்டம்
சார்பில் மூன்று மாதங்கள் சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்காக தேர்ச்சி குறைவான பள்ளிகள் அருகே வசிக்கும் 233 ஆசிரியர்கள் தனியாக
நியமிக்கப்பட்டனர்.
பயிற்சி கடந்தாண்டு நவம்பரில் துவங்கி நடந்து வருகிறது.
காலை 8:30 மணி முதல் 9:30 மணி வரையும், மாலை 4:30 மணி முதல் 5:30 மணி
வரையும் பயிற்சி நடக்கிறது. பிப்ரவரி 15ம் தேதி வரை இப்பயிற்சி நடக்கிறது.
இந்நிலையில், பயிற்சி பெற்ற தேர்ச்சி குறைவான மாணவர்களின் கல்வித் திறனை
சோதிக்க திறனாய்வு தேர்வு வரும் பிப்ரவரி மாதம் நடத்தப்பட உள்ளது.
இதற்காக, வினாத்தாள் சென்னையில் அச்சடிக்கப்பட்டு முதன்மைக் கல்வி
அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
"வாசிப்புத் திறன் குறைவான 9ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி
அளிக்கப்பட்டு வருகிறது. இதில், மாணவர்கள் எந்தளவுக்கு தேர்ச்சி
பெற்றுள்ளனர் என்பதை கண்டுபிடிக்க பிப்ரவரி மாதம் திறனாய்வுத் தேர்வு நடத்த
முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேவையான வினாத்தாள் வந்துள்ளது. இதனை
பிரித்து சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பும் பணி துவங்கப்பட உள்ளது.
இத்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி குறைவாக பெற்றால் மேலும், சிறப்பு பயிற்சி
அளிக்க ஏற்பாடு செய்யப்படும்" என்றார்.
No comments:
Post a Comment