நாளை (நவம்பர் 4) குரூப்-2 தேர்வு நடக்கிறது. அன்று மதியம், இந்து
அறநிலையத்துறையின் கீழ்வரும் திருக்கோயில்களின் செயல் அலுவலர்களுக்கான
குரூப்-7 பி தேர்வும் நடக்கிறது. இத்தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு
முக்கிய ஆலோசனைகள்...
சமீபத்தில் நடந்த
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் வினாத்தாள் மாற்றி அமைக்கப்பட்டு,
சிந்தனைத் திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மனப்பாடம் செய்து
எழுதியவர்கள், இனி சிந்தனைத் திறனை வளர்த்துக் கொள்வது அவசியம்.
ஒரு சம்பவம் அல்லது நிகழ்ச்சி எப்போது நடந்தது என்ற தகவலை மட்டும்
தெரிந்து கொள்ளாமல், அது நடந்ததற்கான காரணங்களை அறிய வேண்டும். முந்தைய
வினா தாள்களில் பொதுத் தமிழ் எளிமையாக இருந்தது. பெரும்பாலான மாணவர்கள், 90
சதவீத மதிப்பெண்களை பெறுவது சாத்தியமாக இருந்தது. மாற்றியமைக்கப்பட்ட
வினாத்தாளில் 80 சதவீத மதிப்பெண்கள் பெறுவதே சவாலான விஷயம். தமிழில்
அதிகபட்ச மதிப்பெண்களை பெறுபவர்களால் தான், தேர்வில் சாதிக்க முடியும்.
சொற்களை ஒழுங்குபடுத்தி, சரியான சொற்றொடர் அமைக்கும் பகுதியில்
புகழ்பெற்ற செய்யுள் வரிகளே வினாக்களாக தரப்படுகின்றன. "பொருள் தருக' பகுதி
வினாக்கள், பொருத்துக வடிவில் கேட்கப்படுகின்றன. ஆழமான பொருள் கொண்ட
இவ்வகை வினாக்களுக்கு விடையளிக்க, பிளஸ் 1, பிளஸ் 2 தமிழ்ப் புத்தகத்தில்
செய்யுள் பகுதிளை படிக்க வேண்டும்.
பகுபத உறுப்பு இலக்கணம், சீர்பிரித்தல், அசைபிரித்தல், எதுகை, மோனை,
அளபெடைகள், யாப்பு, ஆகு பெயர்கள் ஆகியவை வினாத்தாளில் புதிய அம்சங்கள்.
இவற்றுக்கு சரியாக விடையெழுத நல்ல பயிற்சியும், பரிச்சயமும் அவசியம். இவை
ஒன்பதாம், பத்தாம் வகுப்பு பாடப் புத்தகத்திலிருந்து
கேட்கப்படுகின்றன.விடைக்கேற்ற வினாவை தேர்வு செய்யும் பகுதியில், செய்யுள்
வடிவத்திலேயே வினாக்கள் இடம் பெறும்.
பொதுவாக திருக்குறள், செய்யுள், பழமொழிகளிலிருந்தே கேள்விகள்
தரப்படுகின்றன. இதற்கு விடையளிக்க, ஆறிலிருந்து பிளஸ் 2 வரை உள்ள
திருக்குறள், செய்யுளை படித்தால் போதும்.இலக்கணக் குறிப்பு, வாக்கிய வகைகளை
தேர்வு செய்தல் ஆகியவற்றுக்கு உதாரணம் கேட்பதை விட, அவற்றுக்கு வரையறைகள்
கேட்கப்படுகின்றன. இந்த வினாக்கள் எளிமையாக தோன்றினாலும், நுட்பமான
வேறுபாடுகள் கொண்டவை. கவனமாக பதிலளிக்க வேண்டும்.
நூல் மற்றும் நூலாசிரியர்கள் குறித்த வினாக்களில் நவீன எழுத்தாளர்கள்
பற்றியும், நூல்கள் பற்றியும் விவரங்களை தொகுத்து வைத்துக் கொள்வது நல்லது.
சாகித்ய அகாடமி விருது வென்றவர்கள், பரிசு பெற்ற நூல்கள், ஞான பீட பரிசு
பெற்றவர்கள் ஆகியோரையும் அறிந்து கொள்ள வேண்டும்.
வரலாறு பாடத்துக்கு, 6,7,8ம் வகுப்பு பாடப் புத்தகங்களே போதுமானவை.
இப்பாடங்களில் உள்ள தலைப்புகளை ஒட்டி, மேலும் சில தகவல்களை சேகரித்து
வைத்துக் கொண்டால் நல்ல மதிப்பெண் பெறலாம். புவியியல் பாடத்துக்கு 7,8ம்
வகுப்பு பாடப் புத்தகங்களும், பொருளியலுக்கு 9,10, பிளஸ் 1
பாடப்புத்தகங்களும் போதுமானவை.
அறிவியல் பாடத்துக்கு, 6-10 வகுப்பு வரை உள்ள இயற்பியல், வேதியியல்
பாடங்களும், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உயிரியல் பாடங்களும் அவசியம்.
புத்தகத்தில் உள்ள பயிற்சி வினாக்களையும், விளக்கப் படங்களையும் படிக்க
வேண்டும்.
நடப்பு நிகழ்வுகள் சம்பந்தப்பட்ட வினாக்களுக்கு விடையளிக்க, தினசரி
செய்தித்தாள்கள் படித்து வருவது தான் ஒரே வழி. சமீபத்திய நிகழ்வுகள்
அடங்கிய புத்தகங்கள் ஓரளவு பயன் தரும். எல்லாவற்றையும் விட, தேர்வு எழுதும்
மூன்று மணி நேரமும் நேரத்தை சரியாக பயன்படுத்தி, விரைவாக அனைத்து
வினாக்களுக்கும் விடையளிப்பது அவசியம். தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள்,
வெற்றி உங்கள் வசம்.
No comments:
Post a Comment