பள்ளி, கல்லூரி மாணவர்களிடம், நம் நாட்டின் பாரம்பரியம் குறித்த
விழிப்புணர்வை அதிகரிக்க, நகரும் அருங்காட்சியகம் அமைக்க,
அருங்காட்சியகங்கள் துறை முடிவு செய்துள்ளது.
தமிழகம் முழுக்க, 20 இடங்களில், அருங்காட்சியகங்கள் உள்ளன. இவற்றில்,
மானுடவியல், விலங்கியல், தாவரவியல், புவியியல் உள்ளிட்ட, பல்வேறு பிரிவுகள்
உள்ளன. நம் நாட்டின் அரிய பொக்கிஷங்கள், இங்கு பார்வைக்கு
வைக்கப்பட்டுள்ளன.
அரிய தபால் தலைகள், காசுகள், பட்டயங்கள், இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு
முன் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் கூட, காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
அருங்காட்சியகத்திற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும்,
பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,
அருங்காட்சியகங்கள் துறை, "நகரும் அருங்காட்சியகம்" அமைக்க முடிவு
செய்துள்ளது. பஸ்சின் உள் பகுதியை, காட்சிக் கூடமாக்கி, பஸ்சின் இரண்டு
புறங்களிலும், காட்சிக்கு வைத்திருக்கும் பொருட்கள் குறித்த அறிவிப்பு
சுவரொட்டிகளில் ஒட்டப்படும்.
பின், அருங்காட்சியகத்தின், பல்வேறு துறைகளில் உள்ள முக்கியமான
பொருட்கள், காட்சிக்கு வைக்கப்படும். ஒரே நேரத்தில், 50க்கும்
மேற்பட்டவர்கள் பார்வையிடும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. மே மாத
இறுதியில், நகரும் அருங்காட்சியகத்தின் பயணம் துவங்குகிறது. தமிழகம்
முழுக்க செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும்
கிராமப்புற பகுதிகளுக்கு சென்று, அங்குள்ளவர்களிடம், அருங்காட்சியகம்
குறித்தும், பாரம்பரியத்தின் மதிப்பு குறித்தும், அந்தந்த பகுதியில் உள்ள
காப்பாட்சியர் விளக்குவர்.
No comments:
Post a Comment