நாட்டிலேயே முதன்முறையாக, மாற்றுத் திறன் குழந்தைகள் நலனுக்காக, மாநில ஆதார வள மையம் அமைக்கப்படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு: கண் பார்வையற்றவர்கள், காது கேளாதவர்கள், வாய் பேச முடியாதவர்கள், உடல் ஊனமுற்றோர், மனவளர்ச்சி குன்றியோர், கற்றலில் குறைபாடு, தசை சிதைவு, மூளை முடக்குவாதம், தற்புணை ஆழ்வு உள்ள குழந்தைகளுக்கு, அவர்களின் இயலாத் தன்மையின் வகை மற்றும் பாதிப்பின் அளவு அடிப்படையில் உள்ளடக்கிய கல்வியை, அரசு வழங்கி வருகிறது.
மாற்றுத் திறனாளிகளுக்காக, 41 கோடி ரூபாய் செலவில், 4,010 சிறப்பு ஆசிரியர்கள்; 17 வாழ்வியல் திறன் பயிற்சி நிபுணர்கள் மற்றும் 719 தன்னார்வலர்கள், புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
உதவி உபகரணங்கள்: பாதிக்கப்பட்ட குழந்தைகளை கண்டறிய, மாநிலம் முழுவதும், 601 மருத்துவ முகாம்கள், வட்டார அளவில் நடத்தப்பட்டதன் பேரில், 15 ஆயிரத்து 888 குழந்தைகள் கண்டறியப்பட்டனர். அக்குழந்தைகளுக்கு தேவையான உதவி உபகரணங்களுக்கும்; 27 குழந்தைகளுக்கு, அறுவை சிகிச்சை உதவியும், 3 கோடியே 49 லட்ச ரூபாய் செலவில் வழங்கப்பட்டுள்ளன.
மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு மட்டுமின்றி, இக்குழந்தைகளின் தேவைகளை, பெற்றோர் அறிந்து கொள்ளும் வகையில், நாட்டில் முதன்முறையாக, மாநில ஆதார வள மையம், சென்னையில் அமைக்கப்படும்.
தொழில்நுட்ப உதவி: இம்மையம் மூலம், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் சுகாதாரத் துறையின் ஒருங்கிணைப்புடன் செயல்படும் சிறப்பு மருத்துவர்கள், வாழ்வியல் திறன் பயிற்சி வல்லுனர்கள், பேச்சுப் பயிற்சி வல்லுனர்கள் மற்றும் வெவ்வேறு குறைபாடுகளுக்கான ஆலோசகர்களின் தொழில்நுட்ப உதவிகளை பெறலாம்.
அவர்களது குறைபாட்டின் தன்மையை முன்னதாக கண்டறிந்து, சிகிச்சை அளிக்கவும், அதற்கு தேவையான உபகரணங்களை, மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கவும், இம்மையம் முன்னோடியாக விளங்கும். அரசால் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள், உதவித் தொகைகள் மற்றும் தேவையான உதவிகளைப் பெற, இம்மையம் வழிவகை செய்யும்.
இக்குழந்தைகளுக்கு, தனியாக ஒரு நூலகப் பிரிவு துவங்கப்படும். மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் இடையே, படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க, முதற்கட்டமாக, கோவை மாவட்ட மைய நூலகத்தில், 50 லட்ச ரூபாய் மதிப்பில், தனிப்பிரிவு துவங்கப்படும். இது, பிற மாவட்ட நூலகங்களுக்கு, படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.
வாழ்வில் ஒளியேற்றும்: இந்தியாவிலேயே முன்னோடியாக, தமிழகத்தில் துவங்க உள்ள, இம்மாநில ஆதார வள மையம், குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றி, அவர்கள் வாழ்க்கை சிறப்படைய உதவும். இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.
No comments:
Post a Comment